இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை மற்றும் பெரும் வெள்ளம் ஏற்பட்டு கடும் சேதம் ஏற்பட்டுள்ள நிலையில், சரியான நேரத்தில் ஒரு நாய் குரைத்ததால் 20 குடும்பங்களை சேர்ந்த 67 பேர் உயிர் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூன் 30 அன்று நள்ளிரவில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள சியாத்தி என்ற கிராமத்தில் இந்த சம்பவம் நடந்தது. தனது வீட்டின் இரண்டாவது மாடியில் தூங்கிக்கொண்டிருந்த ஒரு நாய், திடீரென நள்ளிரவில் மழை கொட்டியதால் குரைக்க தொடங்கியது. பின்னர் ஊளையிட்டது. நாய் குரைக்கும் சத்தத்தை கேட்டு அந்த வீட்டில் உள்ளவர்கள் விழித்தபோதுதான், வீட்டின் சுவர்களில் பெரிய விரிசல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. உடனடியாக அந்த வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்தனர்.
இதனைத் தொடர்ந்து நாய் தொடர்ந்து குரைத்துக்கொண்டிருந்ததை அடுத்து, அக்கம் பக்கத்தில் உள்ள வீட்டில் இருந்தவர்களும் வெளியே வந்து, பெரும் விபரீதம் ஏற்படப் போகிறது என்பதை உணர்ந்துகொண்டு பாதுகாப்பான இடத்தை நோக்கிச் சென்றனர்.
அவர்கள் சென்ற சிறிது நேரத்திலேயே ஒரு மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டு, அந்த பகுதியில் உள்ள 10-க்கும் மேற்பட்ட வீடுகள் தரைமட்டமாகி, நிலச்சரிவில் அடியோடு புதைந்துவிட்டதாக தெரிகிறது. சரியான நேரத்தில் நாய் குரைத்து எச்சரிக்காமல் இருந்திருந்தால், அனைவரும் தூங்கிக்கொண்டிருப்பார்கள் என்றும், பெரும் உயிர்ச்சேதம் ஏற்பட்டிருக்கும் என்றும் கூறப்படுகிறது.