தரிசனத்திற்கு வரும் பிரபலங்கள் அரசியல் பேசக்கூடாது: திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை..!

Siva
திங்கள், 2 டிசம்பர் 2024 (09:41 IST)
திருமலை திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் அரசியல்வாதிகள் மற்றும் நடிகர்கள் பேட்டி அளிக்கும் போது அரசியல் பேசக்கூடாது என்று திருமலை திருப்பதி தேவஸ்தானம் எச்சரிக்கை விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திருமலை ஏழுமலையான் கோவிலுக்கு தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தரும் நிலையில், அரசியல்வாதிகள், நடிகர்கள் என விஐபிகளும் அதிகம் வருகை தருகின்றனர். அவர்கள் கோவில் வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசும் போது அரசியல் பேசுவதால் சில சமயங்களில் அது சர்ச்சைக்குள்ளானதாக மாறிவிடுகிறது.

இந்த சூழலில், கோவில் வளாகத்தில் பேட்டி அளிக்கும் அரசியல்வாதிகள், நடிகர்கள் அரசியல், மத வெறுப்பு கருத்துக்களை கூற தடை விதிக்கப்பட்டு உள்ளதாகவும், அதையும் மீறி ஆன்மீக தலத்தில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பேட்டி அளித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

ஏற்கனவே இந்த விதிமுறை அமலில் உள்ள நிலையில், பலர் இதை பின்பற்றவில்லை என்றும், இந்த தடை உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும், மீறினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பதி திருமலை தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


Edited by Siva

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்