தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, லண்டன் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு தற்போது அமெரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அவருடன் அமைச்சர் விஜயபாஸ்கர், ஆர் பி உதயகுமார், ராஜேந்திர பாலாஜி, உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்துள்ளனர். இதனைத் தொடர்ந்து கல்வி அமைச்சர் செங்கோட்டையன் ஸ்வீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ மொரிஷியஸிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இன்று தூத்துக்குடி ரயில் நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இது குறித்து அவர் அளித்த பேட்டியில், திடீரென அமைச்சர்கள் வெளிநாடு சுற்றுப்பயணம் மேற்கொள்வது புதுமையாக உள்ளது, ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது அமைச்சர்கள் இவ்வாறு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவில்லை என கருத்து தெரிவித்துள்ளார்.
மேலும், ஆட்சி முடியும் தருவாயில் சுற்றுப்பயணம் செல்வதை பார்த்தால், அரசு செலவில் சுற்றுலா செல்ல திட்டமிட்டு இருப்பது போல் தெரிகிறது என குற்றம் சாட்டியுள்ளார். மேலும் அமைச்சர்களின் வெளிநாட்டு பயணம் குறித்து திமுக தலைவர் ஸ்டாலின், தமிழக அமைச்சரவை சுற்றுலா அமைச்சரவையாக மாறியுள்ளது என கேலி செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.