பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்துள்ளது.
அரசு வேலைவாய்ப்புகளில் பட்டியலின பிரிவினருக்கான இடஒதுக்கீட்டில் வால்மீகி மற்றும் மழாபி சீக்கிய சமூகத்தினருக்கு 50% உள்ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் விதமாக பஞ்சாப் மாநில அரசு சட்டம் கொண்டு வந்தது. இதேபோல் தமிழக அரசு 2009ல் அருந்ததியின மக்களுக்கு இடஒதுக்கீடு கொடுத்து சட்டம் இயற்றியது.
இந்நிலையில் ஆந்திராவை சேர்ந்த இவி சின்னையா என்பவர், மாநில அரசுகள் உள்ஒதுக்கீடு கொடுக்கக்கூடாது என்று கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் பஞ்சாப் அரசின் வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் உட்பட 6 நீதிபதிகள் ஒருமித்த தீர்ப்பு வழங்கினர். அதேநேரம், ஒரு நீதிபதி மாறுபட்ட தீர்ப்பை வழங்கினார். பட்டியலினத்தவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க எந்த தடையும் இல்லை என்றும் பட்டியலினத்தில் மிகவும் பின்தங்கியோருக்கு உள்ஒதுக்கீடு வழங்க பஞ்சாப் அரசு கொண்டுவந்த சட்டம் செல்லும் என்றும் 6 நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
உள்ஒதுக்கீடு வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் இல்லை என்று உச்ச நீதிமன்றத்தின் ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2005-ம் ஆண்டு அளித்த தீர்ப்பை, தலைமை நீதிபதி தலைமையிலான அரசியல் சாசன அமர்வு இன்று ரத்து செய்தது.