நாளை கூடுகிறது நாடாளுமன்றம்..! பல்வேறு பிரச்சினைகளை எழுப்ப எதிர்கட்சிகள் திட்டம்..!!

Senthil Velan

ஞாயிறு, 23 ஜூன் 2024 (15:15 IST)
பரபரப்பான அரசியல் சூழலில் 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத் தொடரில் சபாநாயகர் விவகாரம், நீட் தேர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகள் முடிவு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 
18-வது மக்களவைத் தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 293 இடங்களைக் கைப்பற்றி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியைத் தக்கவைத்தது. பிரதமராக தொடர்ந்து மூன்றாவது முறையாக நரேந்திர மோடி கடந்த ஜூன் 9-ம் தேதி பதவியேற்றார். இந்தச் சூழலில், 18வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் நாளை  தொடங்கி ஜூலை 3-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
 
இதேபோல், மாநிலங்களவையின் 264வது அமர்வு ஜூன் 27-ம் தேதி தொடங்கி ஜூலை 3 வரை நடைபெறவிருக்கிறது. ஜூன் 27-ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் உரையாற்றவுள்ளார். மக்களவை கூட்டத் தொடரின் முதல் இரு நாள்களில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்கவுள்ளனர். மக்களவை இடைக்கால தலைவர் பர்த்ருஹரி மகதாப் முன்னிலையில் எம்.பி.க்கள் பதவியேற்பு நடைபெறும். ஜூன் 26-ம் தேதி மக்களவைத் தலைவர் தேர்தல் நடைபெறவுள்ளது.
 
இந்த கூட்டத்தொடரில் இடைக்கால சபாநாயகர் நியமனம் தொடர்பான பிரச்சினையை எதிர்க்கட்சிகள் கிளப்பும் என தெரிகிறது. அதாவது, இடைக்கால சபாநாயகராக பா.ஜ.க.வைச் சேர்ந்த மூத்த தலைவர் பர்த்ருஹரி மஹ்தாப் நியமனம் செய்யப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
 
இதனிடையே, புதிய மக்களவைத் தலைவராக தேர்வாகப் போவது யார் என்ற கேள்வி நீடித்து வருகிறது. பாஜக கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகிய இரு கட்சிகளுமே மக்களவைத் தலைவர் பதவியை எதிர்பார்ப்பதாக கூறப்படும் நிலையில், அப்பதவியை பாஜக விட்டுக் கொடுக்காது என்று கூறப்படுகிறது.
 
கடந்த முறை ராஜஸ்தான் எம்.பி. ஓம் பிர்லா மக்களவைத் தலைவராக செயல்பட்டார். அவருக்கே பாஜக மீண்டும் வாய்ப்பளிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் பாஜக மூத்த தலைவா்கள் டி.புரந்தரேஸ்வரி, ராதா மோகன் சிங் உள்ளிட்டோரின் பெயர்களும் பரிசீலிக்கப்படுவதாக கூறப்படுகிறது. கடந்த இரு தேர்தல்களைப் போல் இல்லாமல், மக்களவையில் எதிர்க்கட்சிகளின் பலம் இம்முறை கணிசமாக அதிகரித்துள்ளது. எனவே, எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி தரப்பில் வேட்பாளர் களமிறக்கப்படலாம் என சொல்லப்படுகிறது.

ALSO READ: எல்லையில் ஊடுருவ முயற்சி.! 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை.! பாதுகாப்பு படை அதிரடி..!!

இதனால் புதிய சபாநாயகர் விவகாரத்தில் அனல் பறக்கும் விவாதம் நடைபெறும் என தெரிகிறது. மேலும் நீட் வினாத்தாள் கசிவு, முதுநிலை நீட் தேர்வு ஒத்திவைப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளை எழுப்பி நாடாளுமன்றத்தை முடக்க எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்