உத்தரப்பிரதேசத்தில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த பேருந்து மீது கருங்கல் ஏற்றி வந்த லாரி மோதியதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
உத்திரப்பிரதேச மாநிலம் சீதாப்பூர் பகுதியைச் சேர்ந்த 40-க்கும் மேற்பட்டோர் பேருந்தில் பூர்ணகிரி பகுதிக்கு ஆன்மீக யாத்திரை மேற்கொண்டனர். அப்போது ஷாஜகான்பூர் அருகே வந்தபோது உணவு அருந்துவதற்காக அப்பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் பேருந்து நிறுத்தப்பட்டது. சிலர் இறங்கி உணவு அருந்துவதற்காக உள்ளே சென்ற நிலையில், சிலர் வாகனத்திலேயே இருந்துள்ளனர்.
அப்போது அவ்வழியாக அதிவகத்தில் கருங்கல் ஏற்றி வந்த லாரி, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் இருந்த பேருந்தின் மீது லாரி மோதியது. இதில் பாரம் தாங்காமல் அந்த லாரி, பேருந்து மீது கவிழ்ந்ததில் பேருந்தில் அமர்ந்திருந்த 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடினர்.
அருகில் இருந்தவர்கள் பேருந்துக்குள் நுழைந்து காயமடைந்தவர்களை மீட்க முயற்சித்த போது, கருங்கல் பாரம் அதிகமாக இருந்ததால் முடியவில்லை. இதையடுத்து தீயணைப்புத் துறையினருக்கும், போலீஸாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு கிரேன்களுடன் வந்த மீட்புப் படையினர் கற்களை அகற்றிவிட்டு பேருந்தில் சிக்கி இருந்த 21 பேரை மீட்டனர். ஆனால் அதில் 11 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.