பரம்பரை சொத்துக்களுக்கு வரி..! காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள்..! பிரதமர் மோடி..!!

Senthil Velan

புதன், 24 ஏப்ரல் 2024 (18:16 IST)
காங்கிரஸின் ஆபத்தான உள்நோக்கங்கள் ஒவ்வொன்றாக வெளிவருகின்றன என்று பிரதமர் நரேந்திர மோடி விமர்சித்துள்ளார்.
 
சத்தீஸ்கரில் உள்ள சர்குஜா மாவட்டத்தின் தலைமையகமான அம்பிகாபூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக் கூட்டத்தில் பேசிய நரேந்திர மோடி,  முன்பு ராகுலின் தந்தைக்கும், தற்போது ராகுலுக்கும் ஆலோசகராக இருக்கும் சாம் பிட்ரோடா, நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் கடினமாக உழைத்து சம்பாதிப்பவர்கள் மீது அதிக வரி திணிக்கப்பட வேண்டும் என கூறி இருக்கிறார் என்று தெரிவித்துள்ளார்.
 
இப்போது காங்கிரஸ் ஒரு படி மேலே சென்று பரம்பரை சொத்துக்களுக்கு வரி விதிக்கப் போகிறோம் என்கிறார்கள் என்றும் அப்படியானால், பெற்றோரிடமிருந்து அவர்களின் வாரிசுகள் பெரும் சொத்துக்களுக்கு வரி விதிக்கப்படும் என்றும் பிரதமர் தெரிவித்தார் 
 
நீங்கள் உயிருடன் இருக்கும் வரை, காங்கிரஸ் அதிக வரி விதிக்கும் என்றும் உங்கள் ஆயுள் முடிந்த பிறகு, அது உங்கள் மீது பரம்பரை சொத்து வரியைச் சுமத்தும் என்றும் அவர் குறிப்பிட்டார். மேலும் காங்கிரஸ் உங்கள் சொத்துகளை சூறையாடி உங்கள் குழந்தைகளின் உரிமைகளை பறிக்க நினைக்கிறார்கள் என்றும் இதை நீங்கள் அனுமதிப்பீர்களா? என்றும் பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.
 
நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்த வரை மக்களின் பணம் கொள்ளையடிக்கப்பட்டது என்று அவர் குற்றம் சாட்டியுள்ளார். பாஜக ஆட்சி அமைந்த பிறகு மக்களின் பணம் அவர்களுக்காக செலவிடப்படுகிறது என்றும் காங்கிரஸின் கண்கள் உங்கள் இடஒதுக்கீட்டின் மீது மட்டுமல்ல, உங்கள் வருமானம், உங்கள் வீடுகள், கடைகள் மற்றும் பண்ணைகள் மீதும் உள்ளன என்றும் அவர் கடுமையாக சாடினார்.

ALSO READ: பொய்களை கூறி கண்ணியத்தை குறைத்துக் கொள்ளக்கூடாது..! ராஜ்நாத் சிங்கிற்கு, ப.சிதம்பரம் அறிவுரை..!
 
நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தின் சொத்துக்களையும் எக்ஸ்ரே எடுக்கப் போவதாக ராகுல் காந்தி கூறுகிறார் என தெரிவித்த பிரதமர், சுர்குஜாவில் உள்ள நமது பழங்குடியினரின் ஆபரணங்களையும் தாலியையும் அணிந்துகொள்வார்கள் என்றும் இவை அனைத்தையும் காங்கிரஸ் பறித்துக்கொள்ளும் என்றும் விமர்சித்தார்

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்