அலோபதி மேல அப்படி என்ன கடுப்பு? – பாபா ராம்தேவிடம் நீதிமன்றம் கேள்வி!

செவ்வாய், 23 ஆகஸ்ட் 2022 (17:27 IST)
அலோபதி மருத்துவம் குறித்து சாமியார் பாபா ராம்தேவ் சர்ச்சைக்குரிய வகையில் பேசியது குறித்து நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

இந்து மத சாமியாரான பாபா ராம்தேவ் பதஞ்சலி நிறுவனம் மூலம் ஆயுர்வேத, இயற்கை தயாரிப்புகள் பலவற்றை நாடு முழுவதும் விற்பனை செய்து வருகிறார். கொரோனா சமயத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டு மக்கள் உயிரிழந்த சமயம் “அலோபதி மருத்துவத்தால் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்துள்ளனர். இது ஒரு பணம் பறிக்கும் மருத்துவமுறை” என ராம்தேவ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இது தொடர்பான இந்திய மருத்துவர் சங்கம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு பாபா ராம்தேவுக்கு சரமாரி கேள்விகளை எழுப்பியது.

அதில் ”அலோபதி மருத்துவ முறையை ராம்தேவ் தொடர்ந்து விமர்சிப்பது ஏன்? அலோபதியை விட ஆயுர்வேத மருத்துவம் மற்றும் மருந்துகள்தான் சிறந்தது என்பதற்கு ஏதாவது ஆதாரம் உள்ளதா? ராம்தேவின் இந்த விமர்சனங்கள் பொதுமக்களின் சுகாதார நலனை பாதிக்கக்கூடியதாக உள்ளது. இதர மருத்துவமுறைகள் குறித்து ராம்தேவ் அவதூறு பரப்பக் கூடாது” என கூறிய நீதிமன்றம், இந்த வழக்கில் பாபா ராம்தேவ் பதிலளிக்க கூறி வழக்கை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்