மீண்டும் பஞ்சாயத்தை கூட்டும் சுப்பிரமணியன் சுவாமி: குடியரசுத்தலைவருக்கு பகீர் கடிதம்!

Webdunia
வெள்ளி, 9 பிப்ரவரி 2018 (12:12 IST)
பாஜக மூத்த தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான சுப்பிரமணியன் சுவாமி மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எதிராக குடியரசுத்தலைவருக்கு கடிதம் எழுதியது பாஜக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஜம்மு காஷ்மீர் சோபியான் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருக்கும் தீவிரவாதிகளுக்கும் இடையே நேற்று முன்தினம் முதல் கடுமையான சண்டை நடந்து வருகிறது. இதனால் அப்பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டு அங்கு பதற்றம் நிலவி வருகிறது.
 
இந்நிலையில் கடந்த மாதம் ஜம்மூ காஷ்மீரில் ராணுவ வீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் மூன்று பேர் பலியாகினர். இதற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பு தெரிவிக்க முதல்வர் மெகபூபா முப்தி சில ராணுவ வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டார்.
 
இதனையடுத்து இது தொடர்பாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் அழைத்து விளக்கம் கேட்க வேண்டும் என குடியரசு தலைவருக்கு சுப்பிரமணியன் சுவாமி கடிதம் எழுதியுள்ளார்.
 
அதில், தினம் தினம் நமது ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டு வரும் நிலையில், பாதுகாப்புத் துறை அமைச்சரின் அறிவுறுத்தலின் பேரில்தான் காஷ்மீர் அரசு, ராணுவ வீரர்கள் மீது வழக்கு பதிவு செய்ததா? என கேள்வி எழுப்பியுள்ளார். முன்னதாக மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியிடம் மோதல் போக்கை கடைபிடித்து வந்த சுப்பிரமணியன் சுவாமி தற்போது நிர்மலா சீதாராமனிடம் பஞ்சாயத்தை கூட்டியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்