மண்டை ஓடுகள், மனித மாமிசம் - அகோரிகளின் வாழ்க்கை எப்படி இருக்கும்?

Webdunia
திங்கள், 14 ஜனவரி 2019 (14:49 IST)
பிணங்கள் தகனம் செய்யப்படும் இடங்களில் தியானம் செய்து, உணவு உண்டு, உறக்கம் கண்டு, உடலுறவு வைத்து கொள்வார்கள். ஆடை இல்லாமல் திரிந்து, மனித மாமிசத்தை உண்டு, மனிதர்களின் மண்டை ஓடுகளை ஏந்தி, கஞ்சாவும் புகைப்பார்கள். ஆண்டு முழுவதும் எங்கோ தனிமையாக வாழ்ந்து வரும் அவர்கள் கும்பமேளாவின்போது ஒன்றாகத் கூடுவார்கள்.
இப்படியாக இந்திய சமூகத்தின் விளிம்பின் வாழும் இந்த இந்து சாமியார்கள் அகோரிகள் என்று அறியப்படுகிறார்கள். சமஸ்கிருதத்தில் அகோரி என்றால் 'பயமில்லாத' என்று அர்த்தம். ஆனால், இவர்கள் செய்யும் சடங்குகளின் கதைகள் பலரின் உள்ளே ஆர்வத்தையும், வெறுப்பையும், பயத்தையும் வர வைக்கும்.
 
உத்திரபிரதேச மாநிலம் பிரயாக் (அலாகாபாத்) நகரில் ஜனவரி மாதம் 15ஆம் தேதி தொடங்க இருக்கிறது கும்பமேளா.
 
ஆன்மீக முன்னேற்றம்
 
"ஆன்மீக ஞானத்தை அடைந்து, கடவுளுடன் ஒன்றாக இணைவதற்காக அனைத்தையும் கடந்து இருப்பதே அவர்களின் பொதுவான வழக்கம்," என்கிறார் லன்டனில் சமஸ்கிருதம் மற்றும் இந்திய ஆய்வுகள் நடத்தி வரும் ஆசிரியர் ஜேம்ஸ் மலின்சன்.
 
இவர் அகோரிகளுடன் பலமுறை கலந்துரையாடி இருக்கிறார்.
 
''மற்றவர்களுக்கு பெரும் மனத்தடை இருக்கும் ஒரு விஷயத்தை உடைப்பதே அகோரிகளின் அணுகுமுறை. பொதுவாக இது நல்லது, இது கெட்டது என்ற சாதாரண கருத்துகளை இவர்கள் ஏற்க மாட்டார்கள்."
 
"மனித மாமிசத்தை உண்ணுவது, தங்களின் மலத்தை உண்ணுவது என அவர்கள் ஆன்மீக வாழ்க்கை பல அபாயகரமான வழக்கங்களை கொண்டதாகும். ஆனால், இதையெல்லாம் செய்தால், ஒரு மேம்பட்ட நிலையை அடைய முடியும் என்று அவர்கள் நம்புகிறார்கள்" என்கிறார் ஜேம்ஸ்.
 
வரலாறு என்ன?
 
இன்று இவர்கள் பின்பற்றும் வழக்கங்களைப் பார்க்கும்போது, சமீப சில நூற்றாண்டுகளுக்குள் இவை தொடங்கி இருக்க வேண்டும் என்று தெரிகிறது. அகோரி என்ற வார்த்தையே 18ஆம் நூற்றாண்டில் இருந்துதான் கவனத்தை ஈர்க்க ஆரம்பித்தது.
 
7ஆம் நூற்றாண்டில் ஆவணப்படுத்தப்பட்ட கபாலிக (மண்டை ஓட்டை ஏந்தி இருப்பவர்கள்) துறவிகளின் அநேக பழக்கங்கள் உடைய அகோரிகளாக இருந்துள்ளனர். அவர்கள் மனிதர்களை உயிர்பலி கொடுக்கும் வழக்கத்தைக்கூட கடைபிடித்து வந்தார்கள்.
மற்ற சில இந்து சாமியார்களைப் போல, அகோரிகளுக்கு இடையே எந்த ஒருங்கிணைப்பும் கிடையாது. பெரும்பாலும் தனிமையிலேயே வாழும் அவர்கள் வெளி மனிதர்களை அவ்வளவு எளிதில் நம்பமாட்டார்கள். தனது சொந்த குடும்பத்தினரிடம்கூட எந்த தொடர்பையும் வைத்திருக்க மாட்டார்கள்.
 
பெரும்பாலான அகோரிகள் கீழ் சாதி என்று கூறப்படும் சாதிகளில் இருந்து வந்தவர்களாகவே இருப்பார்கள்.
 
''பல்வேறு அகோரிகள், வெவ்வேறு விதமான அறிவாற்றலுடன் இருப்பார்கள். சிலர் நல்ல கூர்மையான அறிவுடன் இருப்பார்கள். ஒரு அகோரி நேபால் நாட்டு அரசரின் ஆலோசகராகக் கூட இருந்தார்," என்று கூறுகிறார் ஜேம்ஸ் மலின்சன்.
 
வெறுப்புணர்வு கிடையாது
 
அகோரிகள் சரியாக புரிந்து கொள்ளப்படாதவர்கள் என்கிறார் Aghori: A Biographical Novel என்ற புத்தகத்தின் ஆசிரியர் மனோஜ் தக்கர்.
 
"அகோரிகள் இயற்கையோடு சேர்ந்து மிக எளிமையாக வாழக்கூடியவர்கள். எந்த கோரிக்கைகளும் அவர்களுக்கு கிடையாது. அனைத்தையும் ஒரு உச்சத்தின் வெளிப்பாடகவே அவர்கள் பார்க்கிறார்கள். யாரையும் அல்லது எதனையும் அவர்கள் வெறுக்க மாட்டார்கள். அதனால்தான் கொல்லப்பட்ட விலங்கின் மாமிசத்திற்கும், மனித மாமிசத்திற்கும் இடையில் அவர்கள் எந்த பாகுபாடும் பார்க்க மாட்டார்கள். அவர்களுக்கு என்ன கிடைக்கிறதோ, அதனை அவர்கள் உண்வார்கள்"
 
அகோரிகள் வழிபாட்டின் முக்கியமான மற்றொரு பகுதி விலங்குகளை பலி கொடுப்பது.
"கஞ்சா புகைத்துக் கொண்டு, மிகுந்த உற்சாகமான நிலையில் கூட, சுய விழிப்புணர்வுடன் இருக்க அவர்கள் முயல்வார்கள்."
 
சிறு குழுக்கள்
 
ஒரு சில குறைவான மக்களே, அகோரி நம்பிக்கையை உண்மையாக பின்பற்றுக்கிறதாக மேஜம்ஸ் மற்றும் தக்கர் ஆகியோர் கூறுகின்றனர்.
 
கங்கையில் குளிக்க கும்பமேலாவுக்கு வருகை தரும் பலரும் தன்னை அகோரிகள் போல காட்சிப்படுத்தி கொள்வதாக கூறப்படுகிறது. அங்கு வரும் சுற்றுலா வாசிகள் மற்றும் பக்தர்களிடம் இருந்து பணம் வாங்க அகோரிகளாக நடிப்பார்கள் என்கின்றனர்.
 
அங்கு வரும் பக்தர்கள் அவர்களுக்கு பணம் மற்றும் உணவு வழங்குவார்கள், ஆனால், உண்மையான அகோரிகள் பணத்தை அலட்சியம் செய்வார்கள்.
 
"அனைவரின் நலனுக்காக அகோரிகள் பிரார்த்தனை செய்வார்கள். அவர்களிடம் ஆசி பெறுபவர்களுக்கு குழந்தை வேண்டுமா அல்லது வீடு கட்ட வேண்டுமா என்றெல்லாம் குறித்து கவலை இல்லை"
 
அழிக்கும் கடவுள் என்று அறியப்படும் சிவன் மற்றும் அவரது மனைவி சக்தியை தான் முக்கியமாக அகோரிகள் வணங்குவார்கள். வட இந்தியாவில் ஆண் அகோரிகளை மட்டுமே காண முடியும். ஆனால், மேற்கு வங்காளத்தில் பெண்களும் அகோரிகளாக வாழ்வதை காண முடியும். பெண் அகோரிகள் உடை அணிந்திருப்பார்கள்.
 
"பெரும்பாலான மக்களுக்கு சாவு குறித்த அச்சம் உண்டு. உடல் தகனம் செய்யப்படும் மைதானங்கள் இறப்பைக் குறிப்பவை. அதுதான் அகோரியின் தொடக்கப்புள்ளி. அவர்கள் சாதாரண ஒரு மனிதனின் அறநெறிகளையும் மதிப்பீடுகளையும் கேள்விக்கு உட்படுத்த விரும்புகிறார்கள்," என்கிறார் தக்கர்.
 
சமூக சேவை
 
ஆனால், அகோரிகள் குறித்த அனைத்து விஷயங்களும் அதிர்ச்சி அளிக்கக்கூடியவை அல்ல.
கடந்த சில தசாப்தங்களில், பல வழக்கங்கள் மாறியுள்ளன. அவர்கள் தொழு நோயாளிகளுக்கு மருத்துவ சேவை வழங்கவும் தொடங்கியுள்ளனர்.
 
"மனிதர்கள் தொடவே தயக்கம் காட்டும் ஒரு சமூகத்தினருடன் அகோரிகள் பணிபுரிந்து வருகிறார்கள்," என்கிறார் மின்னிசோடாவை சேர்ந்த மருத்துவ மற்றும் கலாசார மானுடவியலாளரான ரொன் பேரட்.
தன் குடும்பத்தினரால் கைவிடப்பட்ட தொழு நோயாளிகள் பலர், வாரணாசியில் அகோரிகளால் நடத்தப்படும் மருத்துவமனையில் தஞ்சமடைந்துள்ளனர். அங்கு அவர்களுக்கு ஆயூர்வேத முறையில் இருந்து நவீன மேற்கத்திய மருத்துவ முறையில் கூட சிகிச்சை வழங்கப்படுகிறது.
 
"மருந்துகளும் அவர்களது ஆசிர்வாதங்களும் ஒன்றாக கிடைக்கிறது."
 
அகோரிகள் சிலர் செல் போன்கள் மற்றும் பொது போக்குவரத்தை பயன்படுத்துகிறார்கள். இப்போது அகோரிகள் வெளியிடங்களுக்கு செல்லும்போது குறைந்தளவிலாவது ஆடைகள் அணிய ஆரம்பித்துள்ளனர்.
 
ஒருபாலுறவுக்கு எதிர்ப்பு
 
லட்சக்கணக்கான மக்கள் இந்து மதத்தை பின்பற்றினாலும் அனைவருக்கும் ஒரே விதமான நம்பிக்கை இருப்பதில்லை.
 
எத்தனை அகோரிகள் இருக்கிறார்கள் என்ற எண்ணிக்கையை கணக்கிடுவது கடினம் என்றாலும் சில ஆயிரக்கணக்கில் இவர்கள் இருக்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். பல தரப்பட்ட சாமியார்களை பார்த்த இந்திய மக்களுக்கு, அகோரிகளை பார்த்தால் பயமாகவும் வெறுப்பாகவும் இருக்கலாம்.
 
இறந்த உடல்களுடன் உடலுறவு வைத்துக் கொண்டுள்ளதாக ஒருசில அகோரிகள் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளனர். ஆனால், அவர்களுக்கும் ஒரு மனத்தடை இருக்கிறது.
 
"சடங்கிற்காக பாலியல் தொழில் செய்பவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வார்கள். ஆனால், ஒருபாலுறவை அங்கீகரிக்க மாட்டார்கள்" என்கிறார் மருத்துவர் மலின்சன்.
 
மேலும் அவர்கள் இறக்கும்போது, மற்ற அகோரிகளால் அவர்கள் உடல் உண்ணப்படாது. சாதாரண மக்களை போல அவர்கள் உடல் புதைக்கப்படும் அல்லது எரிக்கப்படும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்