எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் தேசிய தர மதிப்பீட்டு ஆணையத்தின் மிக உயரிய A++ தர மதிப்பீட்டினைப் பெற்றதால் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் மனித வள மேம்பாட்டு துறை ஆகியவற்றின் தர மதிப்பீட்டு நிலை 1-ஐ அடைந்து தன்னாட்சி நிலையில் செயல்படுகிறது.
எஸ்ஆர்எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் சமீபத்தில் தேசிய மதிப்பீட்டு ஆணையத்தின் வழியில் மிக உயரிய தர மதிப்பீடான A++ மதிப்பீட்டினை (CGPA 3.55) பெற்று தனித்து திகழ்கிறது.
எஸ்ஆர்எம் நிறுவனத்தின் மிக உயரிய இலக்காக இது கருதப்படுகிறது. சென்ற ஆண்டு இந்தத் தர மதிப்பீட்டிற்காக தனது செயல்பாட்டினைத் தொடங்கிய எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் தேசிய தர மதிப்பீட்டு நிறுவனம் (NAAC) வகுத்திருந்த புதிய வகையிலான நெறிமுறைகளை எல்லா வகையிலும் நிறைவு செய்தது.
புதிய மற்றும் நுட்பமான ஆய்வுக்குழுவின் தர மதிப்பீட்டிற்கு விண்ணப்பித்திருந்த 33 பல்கலைக்கழங்களில் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் உள்பட இரண்டு பல்கலைக்கழகங்கள் மட்டுமே மிக உயரிய A++ தர மதிப்பீட்டை பெற்றுள்ளன.
NAAC தர மதிப்பீட்டில் 3.51 மதிப்பீட்டிற்கு மேலாக எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் பெற்றதால் பல்கலைக்கழக மானியக்குழு மற்றும் மனித வள மேம்பாட்டுத் துறை ஆகியவற்றின் தர மதிப்பீட்டு நிலை 1-ஐ அடைந்து எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் தன்னாட்சி நிலையை அடைந்துள்ளது. இது 2018 ஆம் ஆண்டில் எஸ்ஆர்எம் மணிமகுடத்தில் மற்றொரு வைரக்கல்லாக மிளிர்கிறது.
இந்திய அளவில் இரண்டு மத்திய பல்கலைக்கழங்கள், 12 மாநில பல்கலைக்கழகங்கள், 11 நிகர்நிலை பல்கலைக்கழகங்கள் இவற்றோடு எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் தர மதிப்பீட்டு நிலை 1-னை பெற்றுத் திகழ்வது குறிப்பிடத்தக்கது.
இந்த உயர்நிலை தர மதிப்பீடு 1-னைப் பெற்றதால் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் பல்கலைக்கழக மானியக்குழுவின் 1956 ஆம் ஆண்டு சட்டத்தில் 12B பிரிவின் கீழ் இயல்பாகவே வந்துவிடுகிறது. இதனால் எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் மத்திய அரசு மற்றும் பல்கலைக்கழக மானியக் குழு மற்ற அரசு சார் துறைகள் ஆகியவற்றின் பல்வேறு திட்டங்களில் நிதி உதவியைப் பெறும் தகுதியைப் பெறுகிறது.
எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் மற்ற அரசு பல்கலைக்கழங்களுக்குச் சமமாக அனைத்திலும் குறிப்பாக நிதி பெறுவது உள்பட இணையாக நடத்தப்படும். எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் தர மதிப்பீட்டு நிலை 1-ஐ அடைந்துள்ளதால் புதிய படிப்புகள் / திட்டங்கள் / பள்ளிகள் / புலங்கள் ஆகியவற்றைத் தொடர்ச்சியாக விரிவாக்கம் செய்துகொள்ள முடியும்.
எஸ்ஆர்எம் வளாகத்திற்குள்ளாகவும் வெளியிலும் கல்வி மையங்கள் உருவாக்குதல், திறன் வளர் மேம்பாட்டு படிப்புகள் தொடங்குதல், தேசிய அளவிலான அங்கீகரிக்கப்பட்ட படிப்புகளை உருவாக்குதல், ஆய்வுத் தொடர்பான செயல்பாடுகளை முன்னெடுத்தல், இன்குபேஷன்ஸ் மையங்களை தொடங்குதல், தகுதி அடிப்படையில் வெளிநாட்டு மாணவர்களைச் சேர்ப்பித்தல், வெளிநாட்டுப் பேராசிரியர்களைப் பணியமர்த்தல், திறந்த நிலை மற்றும் தொலைநிலைப் படிப்புகளை தொடங்குதல் மற்ற வெளிநாட்டு பல்கலைக்கழகங்களோடு இணைந்து செயலாற்றுதல் முதலான செயல்பாடுகளை எஸ்ஆர்எம் கல்வி நிறுவனம் முன்னெடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.