கர்நாடகாவின் சிவமொக்கா நகரில் வீர்சாவர்க்கர் பேனர் வைத்ததால் ஏற்பட்ட பிரச்சினையால் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கடந்த ஆகஸ்டு 15ம் தேதி இந்தியாவின் 75வது சுதந்திர தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அப்போது கர்நாடகாவில் உள்ள சிவமொக்கா நகரில் சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது. அப்போது அந்நகரின் ஏ.ஏ.சதுக்கத்தில் சிலர் சாவர்க்கர் பேனர் வைத்த சம்பவம் அங்கு சலசலப்பை ஏற்படுத்தியது.
இதனால் பேனரை மற்றொரு குழு அகற்ற இரு தரப்பினர் இடையே மோதல் வெடித்தது. இதில் சிலருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்ட நிலையில் அவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த வன்முறை சம்பவத்தால் அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நேற்று மாலையுடன் தடை உத்தரவு முடிவடைந்த நிலையில் மேலும் 26ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவை நீட்டிப்பதாக அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் எதிர்வரும் விநாயகர் சதுர்த்திக்காக பல்வேறு இடங்களிலும் சிலைகளை வைக்கும்போது எந்த பேனரும் வைக்கக் கூடாது என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.