எஸ்பிஐ வங்கியின் கிளர்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஜூன் 22, 23 மற்றும் 30 ஆம் தேதி நடைபெற்ற எஸ்பிஐ வங்கியின் கிளர்க் மற்றும் ஜூனியர் அசோசியேட் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. இதில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட் ஆப் மதிப்பெண் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
எஸ்.சி, ஓபிசி மற்றும் பொதுப்பிரிவினர் ஆகிய 3 தரப்பினருக்கும் 61.25 மதிப்பெண் கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.டி பிரிவினருக்கு 53.75 மதிப்பெண் கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 28.5 மதிப்பெண் மட்டுமே கட் ஆப் ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
அதாவது, பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினரின் கட் ஆப் மார்க் எஸ்.சி, எஸ்.டி பிரிவினரை விட மிக குறைவாக உள்ளது. மத்திய அரசு பொருளாதாரத்தில் நலிவடைந்த பொதுப்பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீடு அளித்துள்ளாதால் இவ்வளவு குறைவாக கட் ஆப் நிர்ணயிக்கப்பட்டுள்ளது என தெரிகிறது.
ஏற்கனவே 10% இட ஒதுக்கீடுக்கு கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில் தற்போது எஸ்பி முடிவுகள் மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பல தரப்பினர் எஸ்பிஐ முடிவுகளை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு விமர்சனத்தை எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றனர்.