ஆகஸ்டு மாதம், நடைபெறவிருக்கும், ஆஷஸ் டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்த தொடரில் டெஸ்ட் வரலாற்றிலேயே இதுவரை காணாத ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதாவது, ஆஷஸ் தொடரில் விளையாடும் வீரர்கள், தங்கள் பெயர் பொறிக்கப்பட்டுள்ள ஜெர்சியுடன் விளையாடவுள்ளனர்.
இங்கிலாந்து கிரிக்கெட் அணி, தனது டிவிட்டர் பக்கத்தில் இது குறித்து அதிகாரப்பூர்வ தகவலை வெளியீட்டுள்ளது. மேலும் டெஸ்ட் கிரிக்கெட் ஜெர்சிகளில் வீரர்களின் பெயர்களும் எண்களும் இடம்பெற்றுள்ளன எனவும் அந்த டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளது. அந்த டிவிட்டர் பதிவில், இங்கிலாந்து அணியின் கேப்டன் ஜோ ரூட், அவரது பெயர் மற்றும் எண் பொறித்த ஜெர்சியை அணிந்தவாறு உள்ள புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளனர். இதுவரை டி20, மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே வீரர்கள், தங்களது பெயர்களையும், எண்களையும் பொறித்த ஜெர்சிகளை அணிந்து விளையாடி வந்தனர். ஆனால் தற்போது வரலாறு காணாத வகையில் டெஸ்ட் போட்டிகளிலும் அந்த மாற்றத்தை கொண்டு வந்தது கிரிக்கெட் வீரர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.