மதமாற்றத்திற்காக ரூ.500 கோடி செலவு செய்த சங்கூர் பாபா.. அள்ளி வழங்கிய முஸ்லீம் நாடுகள்..!

Mahendran

வெள்ளி, 11 ஜூலை 2025 (15:32 IST)
சங்கூர் பாபா என்பவர் மதமாற்றத்திற்காக ரூ.500 கோடி ரூபாய் செலவு செய்ததாகவும், அவருக்கு முஸ்லிம் நாடுகள் நன்கொடையாக அள்ளி வழங்கியதாகவும் கூறப்படும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள மாதம்பூர் என்ற பகுதியை சேர்ந்த சங்கூர் பாபா என்பவரும் அவரது கூட்டாளியும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், உத்தரபிரதேசத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் நாசவேலைகளில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. 
 
அதுமட்டுமின்றி, ஏழைகள், ஆதரவற்ற தொழிலாளர்கள், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், கணவரை இழந்த பெண்கள் ஆகியவர்களுக்கு நிதி உதவி அளிப்பதாக கூறி மதமாற்ற நடவடிக்கைகளில் இருவரும் ஈடுபட்டதாகவும், முடியாது என்று சொன்னவர்களை மிரட்டி மதமாற்றம் செய்ததாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
 
இதற்காக சங்கூர் பாபா கிட்டத்தட்ட ரூ.500 கோடி ரூபாய் வரை வெளிநாடுகளில் இருந்து, குறிப்பாக முஸ்லிம் நாடுகளில் இருந்து, பணத்தை பெற்று வந்ததாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த ரூ.500 கோடியில், ரூ.200 கோடி மட்டுமே அதிகாரப்பூர்வமாக பெறப்பட்டதாகவும், ரூ.300 கோடி ரூபாய் ஹவாலா கும்பல் மூலம் பெறப்பட்டதாகவும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 
 
நேபாளத்தில் 100க்கும் மேற்பட்ட வங்கிக்கணக்குகள் திறக்கப்பட்டு, அதன் மூலம் சங்கூர் பாபாவுக்கு பணம் அனுப்பப்பட்டதாகவும், சவுதி அரேபியா, துருக்கி, துபாய், பாகிஸ்தான் போன்ற நாடுகளில் இருந்துதான் அந்த வங்கிக் கணக்குகளுக்குப் பணம் வந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. அவரிடம் இன்னும் விசாரணை செய்தால் மேலும் சில திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்