இன்று நடைபெறவிருந்த ரயில்வே தேர்வும் ரத்து.. தேர்வர்கள் அதிர்ச்சி..!

Mahendran

வியாழன், 20 மார்ச் 2025 (14:20 IST)
நாடு முழுவதும் இன்று  நடைபெறவிருந்த ரயில்வே (உதவி லோகோ பைலட்) தேர்வு திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது.
 
ரயில்வேயில் 18,799 உதவி லோகோ பைலட் பணியிடங்களுக்கு முதல்நிலை கணினித் தேர்வு கடந்த நவம்பர் மாத இறுதியில் நடைபெற்றது. அதன் முடிவுகள் வெளியான பிறகு, தேர்ச்சி பெற்ற தேர்களுக்காக மார்ச் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் இரண்டாம் நிலை கணினித் தேர்வு (CBT-2) நடத்த திட்டமிடப்பட்டது.
 
ஆனால், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, நேற்று  நடைபெறவிருந்த இரண்டு ஷிப்ட் தேர்வுகள் திடீரென ஒத்திவைக்கப்பட்டதாக தேர்வுக்கு சிறிது நேரம் முன்பே அறிவிக்கப்பட்டது. இதனால் தேர்வர்கள் அதிர்ச்சியடைந்தனர். அதேபோல், இன்று நடைபெறவிருந்த முதல் ஷிப்ட் தேர்வும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
 
உதவி லோகோ பைலட் இரண்டாம் நிலை கணினித் தேர்வு வேறு நாளில் நடத்தப்படும் எனவும் அதற்கான அறிவிப்பு ரயில்வே தேர்வு வாரியத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
இந்த தேர்வுக்கு தமிழக மாணவர்களுக்கு தமிழகத்தில் அல்லாமல் தெலங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதற்கு தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர், மேலும் ரயில்வே தேர்வு வாரியமும் இதுகுறித்து விளக்கம் அளித்திருந்தது.
 
இந்த நிலையில், தமிழக தேர்வர்கள் தெலங்கானா மற்றும் அண்டை மாநிலங்களுக்கு பயணம் செய்து தேர்வு எழுத தயாராக இருந்த நிலையில், தேர்வு திடீரென ஒத்திவைக்கப்பட்டதால் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்