பணம் எடுக்க வரிசையில் நின்ற கர்ப்பிணிக்கு குழந்தைப் பேறு

Webdunia
சனி, 3 டிசம்பர் 2016 (16:55 IST)
கான்பூரில் செலவிற்கு பணம் எடுக்க வந்து வரிசையில் சென்றபோது கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


 

கடந்த நவம்பர் மாதம் 8ஆம் தேதி இரவு பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் அந்த நோட்டுகளுக்கு பதில் புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

எந்தவித முன்னறிவிப்பும் இன்றி திடீரென பழைய நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டதால், சாதாரண ஏழை, எளிய ஜனங்கள் தங்களிடம் இருந்த பழைய நோட்டுகளை மாற்றுவதற்கு பெரிதும் சிரமப்பட்டனர்.

மேலும், நீண்ட வரிசையில் காத்திருந்தது, பணம் மாற்ற இயலாமல் தற்கொலை செய்துகொண்டது உள்ளிட்ட பல காரணங்களினால் நூற்றக்கும் மேற்பட்ட எளிய ஜனங்கள் உயிரிழந்தனர். இதற்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன.

இந்நிலையில், பணம் எடுக்க வந்து வரிசையில் சென்றபோது கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலம் கான்பூர் பகுதியில் சர்வேஸ்சா என்ற பெண்ணின் கணவர் விபத்து ஒன்றில் மரணம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து இழப்பீடாக 2.75 லட்சம் வழங்கப்பட்டிருந்தது. அந்த தொகை சர்வேஸ்சா பெயரில் வங்கியில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது.

நிறைமாத கர்ப்பிணியான சர்வேஸ்சா தனது வங்கியில் உள்ள பணத்தை எடுக்க வியாழன் மற்றும் வெள்ளிக் கிழமையும் ஜிகின்காக் பகுதியில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு சென்றுள்ளார்.

இந்நிலையில் வெள்ளியன்று நீண்ட வரிசையில் காத்திருந்த சர்வேஸ்சாவிற்கு வங்கியிலேயே குழந்தை பிறந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அடுத்த கட்டுரையில்