ஒடிசாவில் 15 வயது சிறுமி ஒருவரை மர்ம நபர்கள் கடத்தி தீ வைத்த நிலையில், அந்த சிறுமி தீக்காயங்களுடன் உயிர் தப்பி, ஒரு வீட்டின் கதவை தட்டி உதவி கேட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒடிசாவை சேர்ந்த 15 வயது சிறுமி, தனது தோழியை சந்தித்துவிட்டு வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது, அடையாளம் தெரியாத முகமூடி அணிந்த மர்ம நபர்கள் அவரை மோட்டார் சைக்கிளில் கடத்தி சென்றுள்ளனர். பின்னர், ஒரு ஆற்றங்கரை அருகே அவரது மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளனர்.
கொடூரமாக தீ வைக்கப்பட்ட நிலையில், அந்த சிறுமி பெரும் தீக்காயங்களுடன் தட்டுத்தடுமாறி அருகிலிருந்த ஒரு வீட்டிற்கு ஓடி வந்து கதவை தட்டியுள்ளார். இதை பார்த்த அந்த வீட்டில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்து, உடனடியாக சிறுமிக்கு மாற்று உடைகளை கொடுத்து முதலுதவி செய்துள்ளனர். ஆம்புலன்ஸுக்கும் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஆம்புலன்ஸ் வரும் வரை கிட்டத்தட்ட 90 நிமிடங்கள் அந்த சிறுமி தங்களை வீட்டிலேயே இருந்ததாகவும், தாகத்துடன் இருந்த சிறுமிக்குத் தண்ணீர் கொடுத்ததாகவும், அக்கம் பக்கத்தினருக்கும் தகவல் தெரிவித்ததாகவும் அந்த வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் உடனடியாக வந்த காவல்துறையினர் சிறுமியை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தீ வைத்தவுடன் சிறுமி இறந்திருப்பார் என்று எண்ணி மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டதாகவும், அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்த சிறுமி 70 சதவீதம் தீக்காயங்களுடன் உள்ளூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் அந்த கிராமத்தையே உலுக்கியுள்ள நிலையில், தங்கள் குழந்தைகளை தனியாக வெளியே அனுப்பவே அச்சமாக இருப்பதாக அந்த பகுதி மக்கள் கூறி இருப்பது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.