ரூ.3,500 கோடி ஊழல் மதுபான ஊழல் வழக்கு: முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பெயரும் சேர்ப்பு!

Siva

திங்கள், 21 ஜூலை 2025 (07:43 IST)
ஆந்திர மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள மதுபான ஊழல் வழக்கில், ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரும் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திராவில் சுமார் ரூ.3,500 கோடி மதிப்பிலான மதுபான ஊழல் நடந்ததாக கூறி, மத்திய புலனாய்வு அமைப்புகள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றன. இந்த வழக்கில், ஜெகன்மோகன் ரெட்டியின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த மிதுன் ரெட்டி  என்ற எம்.பி. நேற்று கைது செய்யப்பட்டார். அவரது கைது, அரசியல் வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது இந்த வழக்கில் முன்னாள் முதலமைச்சர் ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளது.
 
கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2024 ஆம் ஆண்டு வரை, மாதந்தோறும் ரூ.50 கோடி முதல் ரூ.60 கோடி ரூபாய் வரை மதுபான ஆலைகளிடமிருந்து மிரட்டி பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அந்த பணம் ஜெகன்மோகன் ரெட்டியிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
 
ஏற்கனவே, இது சந்திரபாபு நாயுடு தலைமையிலான தற்போதைய தெலுங்கு தேசம் அரசின் பழிவாங்கும் செயல் என ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி தலைவர்கள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றனர். இந்த நிலையில், கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெகன்மோகன் ரெட்டியின் பெயரே நேரடியாக குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளதால், ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
 
இதனைத் தொடர்ந்து, ஜெகன்மோகன் ரெட்டி கைது செய்யப்படுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த வழக்கு அடுத்த கட்டமாக என்ன திருப்பங்களை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
 
Edited by Siva
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்