15 வயது சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்த 3 மர்ம நபர்கள்.. காதல் விவகாரமா?

Mahendran

சனி, 19 ஜூலை 2025 (15:07 IST)
ஒடிசாவின் 15 வயது சிறுமி தனது தோழியை பார்க்க சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மூன்று மர்ம நபர்கள் அவரை வழிமறித்து பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது புவனேஸ்வரில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அவரது சிகிச்சைக்கான முழு செலவையும் அரசே ஏற்கும் என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
 
சம்பவம் நடந்த இடம், பலங்கா காவல் நிலையத்திற்கு அருகிலேயே என்பதும், மூவரும் சிறுமிக்கு தீ வைத்துவிட்டுத் தப்பியோடிவிட்டனர் என்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. குற்றவாளிகளை பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
 
இந்தச் சம்பவத்தை கேட்டுத் தான் மிகவும் அதிர்ச்சி அடைந்ததாக ஒடிசா மாநில துணை முதலமைச்சர் பிரபத்தி பரிதா தெரிவித்துள்ளார். குற்றவாளிகளை உடனடியாக கைது செய்யுமாறு காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
 
சிறுமிக்கு நடந்த இந்த கொடூரம் தனிப்பட்ட குடும்ப விரோதம் அல்லது காதல் விவகாரத்தால் நடந்தது என்று கூறப்பட்ட நிலையில், அதை சிறுமியின் குடும்பத்தினர் மறுத்துள்ளனர். இந்த விவகாரத்தை கையில் எடுத்த முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், ஒடிசாவில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு விட்டது என குற்றம் சாட்டியுள்ளார்.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்