சட்டமன்ற கூட்டம் நடைபெற்றபோது ஆன்லைன் ரம்மி விளையாடிய அமைச்சர்... வீடியோவால் பெரும் சர்ச்சை..!

Siva

திங்கள், 21 ஜூலை 2025 (08:14 IST)
மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது, வேளாண்மைத் துறை அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே தனது மொபைல் போனில் ஆன்லைன் ரம்மி விளையாடும் வீடியோ இணையத்தில் வைரலாகி, பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்றுக்கொண்டிருந்த நிலையில், அமைச்சர் தனது கைபேசியில் ரம்மி விளையாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவின. இதற்குப் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் தரப்பிலிருந்து கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகின்றன. "மக்களின் பிரதிநிதியான ஒரு அமைச்சர், மக்களின் குறைகள் குறித்து சட்டமன்றத்தில் பேசாமல், பொறுப்பற்ற முறையில் ரம்மி விளையாடியதை மன்னிக்க முடியாது" எனப் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
 
இந்த குற்றச்சாட்டுக்கு பதிலளித்த அமைச்சர் மாணிக்ராவ் கோக்டே, "சட்டமன்றத்தில் நடந்த விவாதங்களை பார்ப்பதற்காக யூடியூபை திறக்க முற்பட்டபோது, ஏற்கனவே டவுன்லோட் செய்யப்பட்ட ரம்மி செயலி தவறுதலாக திறந்துவிட்டது. நான் அதை தவிர்க்கத்தான் முயன்றேனே தவிர, விளையாடவில்லை. அதுமட்டுமின்றி, சட்டமன்ற கூட்டம் ஒத்திவைக்கப்பட்ட நேரத்தில் தான் இந்த சம்பவம் நடந்தது" என்று விளக்கம் அளித்துள்ளார்.
 
ஆனால், காங்கிரசும் பிற எதிர்க்கட்சிகளும் இந்த விளக்கத்தை ஏற்க மறுத்து, அமைச்சரைக்கடுமையாக விமர்சித்துள்ளன. "விவசாயத்துறை அமைச்சர் ஒருவர் சட்டமன்றத்தில் ரம்மி விளையாடுவது விவசாயிகளுக்கு செய்யும் துரோகம். இதுபோன்ற நபர்களால் விவசாயிகளுக்கு என்ன பலன் ஏற்படப்போகிறது? மக்கள் இவர்களுக்கு சரியான பாடம் புகட்ட வேண்டும்" என்று எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
 
இந்த சம்பவம், மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புணர்வு மற்றும் நடத்தை குறித்த விவாதத்தை மீண்டும் கிளப்பியுள்ளது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்