பெங்களூருவில் பிரபலமான கன்னட தொலைக்காட்சி நடிகை ஸ்ருதி மீது அவரது கணவர் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியதாகவும், தொடை, விலா எலும்புகள், கழுத்து ஆகிய இடங்களில் கத்தியால் குத்தி, தலையை சுவரில் மோதி காயப்படுத்தியதாகவும் கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கன்னட நடிகை ஸ்ருதி தனது கணவர் அம்பரீஷிடம் இருந்து பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்கும் அவ்வப்போது நிதி தகராறுகள் ஏற்பட்டதாக தெரிகிறது. இந்த நிலையில், ஸ்ருதியின் வீட்டிற்கு வந்த அவரது கணவர், அவர் மீது மிளகு ஸ்பிரே அடித்து சரமாரியாக தாக்கியுள்ளார். விலா எலும்புகள், தொடை, கழுத்து ஆகிய இடங்களில் கத்தியால் குத்தி, தலையை சுவரில் மோதியதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது ஸ்ருதி படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரது கணவர் அம்பரீஷ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அம்பரீஷ் ஒரு ஆட்டோ ஓட்டுநர் என்றும், இருவருக்கும் இடையே 20 ஆண்டுகளுக்கு முன் காதல் திருமணம் நடந்ததாகவும், இந்த தம்பதிக்கு இரண்டு குழந்தைகள் உள்ளதாகவும் தெரிகிறது. இருப்பினும், அடிக்கடி இருவருக்கும் இடையே குடும்ப சண்டைகள் வந்த நிலையில், சில மாதங்களாக அவர்கள் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
ஏற்கனவே இருவருக்கும் ஒரு அடிதடி சண்டை நடந்தபோது, இது குறித்து காவல்துறையில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஆனால், உறவினர்கள் தலையிட்டு சமாதானம் செய்து வைத்தனர். இந்த நிலையில், ஸ்ருதி தற்போது தனியாக வாழ்ந்து வரும் நிலையில், மீண்டும் அம்பரீஷ் அவரை கொடூரமாகத் தாக்கியதை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளார்.