இளம்பெண்களை பின்தொடர்ந்து வீடியோ எடுத்த வேலையில்லா பட்டதாரி.. போலீஸ் எடுத்த அதிரடி நடவடிக்கை..!

Siva

வியாழன், 10 ஜூலை 2025 (09:27 IST)
பெங்களூருவில் வேலை இல்லாத ஒரு பட்டதாரி இளைஞர், இளம் பெண்களை பின்தொடர்ந்து வீடியோ எடுத்து அதை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில், இன்ஸ்டாகிராம் நிர்வாகம் எடுத்த எச்சரிக்கையின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
குருசரண் சிங் என்ற 26 வயது இளைஞர், பெங்களூருவின் கே.ஆர். புரம் பகுதியில் தனது சகோதரருடன் வசித்து வருகிறார். வேலையில்லாமல் இருக்கும் இவர், பெரும்பாலும் தனது மொபைல் போனில், சாலையில் நடந்து செல்லும் பெண்களை பின்தொடர்ந்து, அவர்களுக்கே தெரியாமல் வீடியோ எடுத்துள்ளார். அந்த வீடியோ கிளிப்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்ததுடன், சில சர்ச்சைக்குரிய தலைப்புகளையும் கொடுத்துள்ளார். மேலும், அந்த வீடியோக்களில் சில ஆபாசமான கமெண்டுகளும் பதிவாகியுள்ளன. இது குறித்து சம்பந்தப்பட்ட பெண்களுக்கு தெரியவில்லை.
 
இன்ஸ்டாகிராம் நிர்வாகம் இந்த விவகாரத்தை கவனித்து உடனடியாக புகாரளித்த நிலையில், சுறுசுறுப்பான காவல்துறையினர் அந்த நபர் மீது நடவடிக்கை எடுத்தனர். அவரது வீட்டுக்கு சென்று விசாரித்ததில், அவர் பெண்களுக்குத் தெரியாமல் வீடியோ எடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, அவர் கைது செய்யப்பட்டார்.
 
அவர் கைது செய்யப்பட்ட பின்னர்தான், பல பெண்களுக்கு தங்களுக்கே தெரியாமல் இந்த நபர் வீடியோ எடுத்திருக்கிறார் என்பது தெரிய வந்துள்ளது. இதனை அடுத்து, பல பெண்கள் புகார் அளிக்க முன்வந்துள்ளதாகவும், அந்த நபர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், அவருடைய இன்ஸ்டாகிராம் கணக்கை நீக்குவதற்கு காவல்துறை கோரிக்கை விடுத்த நிலையில், இது குறித்து ஆய்வு செய்து வருவதாக இன்ஸ்டாகிராம் நிர்வாகம் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்