2015ஆம் ஆண்டு, ஈரானின் அணு ஆயுத வளர்ச்சியை கட்டுப்படுத்த அமெரிக்கா உள்ளிட்ட முக்கிய நாடுகள் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. ஆனால், தனது முதல் ஆட்சிக் காலத்தில் டிரம்ப் அந்த ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்காவை வாபஸ் பெறச் செய்து, ஈரானுக்கு கடுமையான பொருளாதாரத் தடைகளை விதித்தார்.
ஈரான் தொடர்ந்து யுரேனியம் செறிவூட்டம் செய்வதன் மூலம் அணு ஆயுத மேம்பாட்டை மேற்கொண்டு வருவதாக மேற்கத்திய நாடுகள் பலமுறை எச்சரித்துள்ளன. ஆனால், ஈரான் தனது அணுசக்தி திட்டம் முழுவதுமாக உள்நாட்டு எரிசக்தி தேவைகளுக்காகவே பயன்படுத்தப்படுவதாக விளக்கம் அளித்தது.
இந்த நிலையில் டிரம்ப் மீண்டும் அமெரிக்க அதிபராகியுள்ள நிலையில் அணு ஆயுத ஒப்பந்தத்தை ஈரான் ஏற்க வேண்டும் என வலியுறுத்திய நிலையில் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியன், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்துவதை மறுத்துவிட்டதாக அறிவித்தார்.
இந்த சூழ்நிலையில், டிரம்ப் நேற்று ஒரு நேர்காணலில் பேசும்போது, “ஈரான் இந்த ஒப்பந்தத்தை ஏற்காவிட்டால், அவர்களுக்கு இதுவரை பார்த்திராத அளவிலான தாக்குதல் நடத்தப்படும். அதோடு, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு போல், அவர்கள் மீது அதிக வரிகள் விதிக்கப்படும்” என்று கடுமையாக எச்சரித்துள்ளார்.