உக்ரைனில் உள்ள ஜபோரிஷ்யா நகரில் நேற்று இரவு நடந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். அதே நேரத்தில், உக்ரைனின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலும் ரஷியாவின் தாக்குதலால் 4 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், வடகிழக்கு பகுதியில் உள்ள சுமி கிராமத்தில் 6 குண்டுகள் வீசப்பட்டதாகவும், இதனால் 2 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதேபோல், டோனெட்ஸ்க் பகுதியில் நடந்த தாக்குதலில் 2 பேர் உயிரிழந்ததோடு, 9 பேர் காயமடைந்தனர் என்று அப்பகுதி ஆளுநர் தெரிவித்தார்.
2022ல் தொடங்கிய உக்ரைன்-ரஷியா போர் 4 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்த நிலைமைக்கு முடிவு காண அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் சமாதான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். முதற்கட்டமாக, 30 நாட்கள் போர் நிறுத்த ஒப்பந்தம் குறித்து சமீபத்தில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதினுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
எனினும், இரு நாடுகளும் தொடர்ந்து பரஸ்பர தாக்குதல்களை நடத்தி வருவது, சமாதான முயற்சிகளை சிக்கலாக மாற்றியுள்ளது.