இந்துக்களை கேவலப்படுத்திய நெட்ஃபிளிக்ஸ்!?- தடை செய்ய சொல்லி போராட்டம்

Webdunia
வெள்ளி, 6 செப்டம்பர் 2019 (13:28 IST)
பிரபல ஆன்லைன் ஸ்ட்ரீமிங் நிறுவனமான நெட்பிளிக்ஸ் தனது இணைய தொடர்களில் இந்துக்களை கேவலமாக விமர்சிப்பதாக கூறி அதை தடை செய்யவேண்டும் என பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அமெரிக்காவை தலைமையகமாக கொண்டு ஆன்லைனில் இணைய தொடர்களை வெளியிட்டு வரும் நிறுவனம் நெட்ஃபிளிக்ஸ். வாக்கிங் டெட், ஸ்ட்ரேஞர் திங்க்ஸ் போன்ற ஆங்கில தொடர்கள் மூலம் இந்திய பார்வையாளர்களிடையேயும் பிரபலமானது இந்த நிறுவனம். பிறகு இந்திய பார்வையாளர்களை கவர்வதற்காக இந்திய மண் சார்ந்த கதைகளை தயாரித்து வெளியிட தொடங்கியது நெட்ஃபிளிக்ஸ்.

இதன் தயாரிப்பில் வெளிவந்த சாக்ரெட் கேம்ஸ், டைப்ரைட்டர் போன்ற தொடர்கள் பிரபலமாக பேசப்பட்டன. இந்நிலையில் இந்த இணைய தொடர்களில் இந்து மதத்தை இழிவுப்படுத்தும்படியும், தவறாக சித்தரிக்கும்படியுமான காட்சிகள் இருப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

பாலிவுட் நடிகர்கள் செயிஃப் அலி கான், நவாசுதீன் சித்திக் ஆகியோர் நடித்து 2018 ல் நெட்ஃபிளிக்ஸில் வெளியானது சாக்ரெட் கேம்ஸ் என்ற இணைய தொடர். இந்தியாவில் நடைப்பெறும் போதைப்பொருள் கடத்தல் மற்றும் கேங்க்ஸ்டர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இந்த தொடர் உலகம் முழுவதும் பரவலாக எல்லாராலும் பார்க்கப்பட்டது. இதன் இரண்டாம் சீசன் சமீபத்தில் வெளியானது. அதில் இந்து மதத்தினரை பயங்கரவாதிகளாகவும், மோசமானவர்களாகவும் சித்தரித்திருப்பதாக புகார்கள் எழுந்துள்ளது.

இந்த தொடர் மட்டுமல்ல இதற்கு முன் வெளியான “லைலா” என்ற இணைய தொடரிலும் இந்துக்களை மோசமானவர்களாக, இழிவுப்படுத்தி காட்டியிருப்பதாக பலர் குற்றம் சாட்டியுள்ளனர். இந்து மதத்தை கேவலப்படுத்தும், இந்துக்களை மோசமானவர்களாக சித்தரிக்கும் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனத்தை இந்தியாவில் தடை செய்ய வேண்டுமென பலர் கோரிக்கை வைக்க தொடங்கியுள்ளனர். இதுகுறித்து #BanNetflixInIndia என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் ட்ரெண்டாகி உள்ளது.

இந்தியாவில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக சமீபத்தில்தான் நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் மாதம் 199 ரூபாய் கட்டணம் போன்ற புதிய சலுகைகளை வழங்கியது. இந்நிலையில் தற்போது நெட்ஃபிளிக்ஸை தடை செய்ய வேண்டும் என்று எதிர்ப்புகள் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்