பாஜக தொடர்ந்து கொடுத்து வந்த நெருக்கடியின் காரணமாகவே நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ததாக பிரபல கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சிங் சித்து கூறியுள்ளார்.
பிரபல கிரிக்கெட் வீரர் நவ்ஜோத்சிங் சித்து ஜூலை 18ஆம் தேதி நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்தார். அவர் ஆம் ஆத்மியில் சேரப்போவதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இது குறித்து புதுடெல்லியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சித்து, ”பஞ்சாப் எனக்கு தாய் வீடு. ஆனால் பாஜக மேலிடம் என்னை பஞ்சாப் மாநில அரசியலில் இருந்து விலகியிருக்குமாறு நான்கு முறை வலியுறுத்தியது.
என்னைப் பொருத்தவரை பஞ்சாப் நலனே முக்கியம். பஞ்சாபை விட எனக்கு எந்தக் கட்சியும் பெரியது அல்ல. பஞ்சாப் மக்களிடம் இருந்து என்னை விலகி இருக்கச் சொல்வது வேரை வெட்டுவதற்கு சமமானது.
பஞ்சாப் மக்களிடம் இருந்து விலகியிருக்கச் சொன்னதால் தான் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளேன்” என்றார். ஆம் ஆத்மி கட்சியில் சேரப் போகிறீர்களா? என்ற கேள்விக்கு சித்து பதிலளிக்கவில்லை.