இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே மர்ம சத்தம்! – இஸ்ரேல் பயணிகளுக்கு எச்சரிக்கை!

Webdunia
புதன், 27 டிசம்பர் 2023 (08:55 IST)
இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே மர்ம வெடிச்சத்தம் கேட்ட சம்பவம் குறித்து போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.



டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகம் அருகே மர்ம வெடிச்சத்தம் கேட்டதாக தூதரக அதிகாரிகள் தெரிவித்த தகவலின்பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் மோப்ப நாய்கள் சகிதம் அப்பகுதியை முழுமையாக சோதனை செய்தனர். அப்போது அப்பகுதியில் கொடியில் சுற்றப்பட்ட கடிதம் ஒன்றை கண்டெடுத்துள்ளனர். அதில் என்ன எழுதியிருந்தது என்ற தகவல் தெரியவரவில்லை.

ஆனால் போலீஸார் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் இஸ்ரேல் தூதரகம் இந்தியா செல்லும் இஸ்ரேல் மக்களை எச்சரித்துள்ளது. புத்தாண்டிற்காக பல இஸ்ரேல் மக்கள் இந்தியா வந்துள்ள நிலையில் அவர்கள் பொதுவெளியில் அதிகம் நடமாடாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என இஸ்ரேல் தூதரகம் எச்சரித்துள்ளது. பொதுவெளியில் தாங்கள் இஸ்ரேலியர்கள் என அடையாளப்படுத்தும் விதமான எந்த சின்னங்களையும் அணிய வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.

இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பு இடையே நடந்து வரும் போரில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையில் பல நாடுகளில் இஸ்ரேலுக்கு எதிராக போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்