டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, பிரதமர் நரேந்திர மோடி குறித்து முன்வைத்த கருத்துகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. "பிரதமர் மோடிக்கு அவ்வளவு பெரிய சக்தி இல்லை; அவர் பெரிய விஷயமும் இல்லை. ஊடகங்கள் தான் அவரை புகழ்ந்து பேசி ஊதி ஊதி பெரிய ஆளாக்கிவிட்டன" என்று ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
ராகுல் காந்தி தனது பேச்சில், "நான் இரண்டு மூன்று முறை பிரதமர் மோடியை நேரில் சந்தித்திருக்கிறேன். அவருடன் ஒரே அறையில் அமர்ந்து பேசி இருக்கிறேன். அப்போதெல்லாம் நான் அவரை பெரிய பிரச்சனை இல்லாதவர் என்றுதான் கண்டறிந்தேன். அவருக்கு அவ்வளவு சக்தி இல்லை" என்று திட்டவட்டமாக கூறினார்.
மேலும், "பிரதமர் மோடியைப் பற்றி எந்த ஒரு பெரிய விஷயமும் இல்லை. ஊடகங்கள் தான் அவரை அளவுக்கு அதிகமாக ஊதிப் பெரிதாக்கிவிட்டன. அவர் வெறும் ஒரு காட்சிப் பொருள் தான். அவருக்குத் தேவைக்கு அதிகமாகவே முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது" என்றும் ராகுல் காந்தி குறிப்பிட்டார்.
ராகுல் காந்தியின் இந்தக் கருத்துகள், ஆளும் பாஜக மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளன. அவரது பேச்சுக்கு உடனடியாக பதிலடி கொடுக்க தொடங்கியுள்ள பாஜக தலைவர்கள், ராகுல் காந்திக்கு எதிராக கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.