பவன் கல்யாண் நடித்து வெளியாகியுள்ள தெலுங்கு திரைப்படமான ஹரிஹர வீரமல்லு ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது.
17ம் நூற்றாண்டில் முகலாயர்கள் ஆட்சிக் காலத்தில் நடக்கிறது கதை. வீரமல்லு (பவன் கல்யாண்) யாராலும் பிடிக்க முடியாத திருடனாக வலம் வருகிறார். ஒரு சின்ன ஊரில் திருட்டு தொழில் செய்து ஏழை மக்களுக்கு உதவும் ராபின் ஹூட் வகையறாவாக திரியும் வீரமல்லுவிற்கு ஒரு வேலை வருகிறது. முகலாய பேரரசன் அவுரங்கசீப்பிடம் (பாபி தியோல்) இருக்கும் இந்தியாவின் பொக்கிஷமான கோஹினூர் வைரத்தை கொள்ளையடிப்பதுதான் அந்த வேலை.
இந்து சமஸ்தானங்களை போரிட்டு வென்று பல மாகாணங்களை தன் வசமாக்கி இந்துக்களை கொடுமைப்படுத்தி வருகிறார் பாபி தியோல். இந்நிலையில் பாபி தியோலிடம் வைரத்தை கொள்ளையடிப்பதற்காக பாபி தியோலின் ஆட்சிக்கு உட்பட்ட இடத்திற்குள்ளேயே செல்கிறார் வீரமல்லு. அங்கு இந்துக்கள் படும் பாடுகளை காணும் அவர் முகலாயர்களின் ஆதிக்கத்தில் இருந்து அவர்களை காப்பாற்றத் துடிக்கிறார்.
பாபி தியோலிடம் இருந்து வைரத்தை திருடினாரா வீரமல்லு? முகலாயர்களிடம் இருந்து இந்து மக்களை விடுவித்தாரா? என்ற கேள்விகளுடன் பரபரப்பாக பயணிக்கிறது வீரமல்லு கதையின் முதல் பாகமான இந்த படம். இரண்டாம் பாகத்திற்கான ஒரு முடிச்சையும் வைத்து பரபரப்புடன் முடித்திருக்கிறார்கள்.
சமீபத்திய ஆக்ஷன் படங்களை போலவே குறைவான கதையுடன் அதிகமான சண்டைக் காட்சிகளுடன் வெளியாகியுள்ளது வீரமல்லு. சனாதனம், தர்மம் குறித்து ஆங்காங்கே பவண் கல்யாண் எடுக்கும் க்ளாஸ் அப்ளாஸை அள்ளுகிறது. தெலுங்கு சினிமாவுக்கே உரிய லாஜிக் இல்லாத ஆக்ஷன் காட்சிகளில் வீரமல்லு கால்கள் தரையில் படாத அளவிற்கு பறந்துக் கொண்டே இருக்கிறார். மற்ற கதாப்பாத்திரங்களின் நடிப்பு பல இடங்களில் சிறப்பாக இருந்தாலும், கதைக்குள் அவர்களது பங்கு குறைவாகவே இருப்பதை உணர முடிகிறது. மொத்தத்தில் தெலுங்கு ஸ்டைல் மசாலா ஆக்ஷனில், ஒரு வரலாற்று கதையாக உருவாகியிருக்கிறது ஹரிஹர வீரமல்லு.
Edit by Prasanth.K