என் கணவரை கொலை செய்தவர்களுக்கு தண்டனை பெற்று கொடுத்தவர் முதல்வர் தான்.. பெண் எம்.எல்.ஏ நெகிழ்ச்சி..!

Mahendran

வியாழன், 14 ஆகஸ்ட் 2025 (13:04 IST)
சமாஜ்வாதி கட்சி எம்.எல்.ஏ. பூஜா பால், தனது கணவர் ராஜு பால் கொலையில் நீதியை நிலைநாட்டியதற்காக உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார். 
 
2005-ஆம் ஆண்டு தனது கணவரின் மரணத்திற்கு பிறகு, "என்னை வேறு யாரும் கண்டுகொள்ளாதபோது நீங்கள் எனக்கு செவிசாய்த்தீர்கள்" என்றும், கிரிமினல்களுக்கு எதிரான சரியான நடவடிக்கை எடுத்தீர்கள் என பாராட்டியும் அவர் சட்டப்பேரவையில் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
பகுஜன் சமாஜ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ.வான ராஜு பால், தனது திருமணத்திற்கு சில நாட்களுக்குப் பிறகு, 2005-ஆம் ஆண்டு ஜனவரி 25 அன்று சுட்டுக் கொல்லப்பட்டார். 2004-ஆம் ஆண்டு நடைபெற்ற பிரயாக்ராஜ் மேற்கு தொகுதி இடைத்தேர்தலில், அடிக் அகமதுவின் சகோதரர் அஷ்ரஃபை ராஜு பால் தோற்கடித்ததால் ஏற்பட்ட அரசியல் பகைமையே இந்தக் கொலைக்குக் காரணம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது. 
 
இந்த வழக்கை 2016-ஆம் ஆண்டு சிபிஐ ஏற்றுக்கொண்டது. 2024-ஆம் ஆண்டில், இந்த வழக்கில் ரஞ்சித் பால், அபித், ஃபர்ஹான் அகமது, இஸ்ரார் அகமது, ஜாவேத், குல்ஹாசன், மற்றும் அப்துல் கவி உள்ளிட்ட ஏழு பேரை சதித்திட்டம் மற்றும் கொலை குற்றங்களுக்காக CBI நீதிமன்றம் குற்றவாளிகளாக அறிவித்தது.
 
இதை குறிப்பிட்டு தான்  "என் கணவரைக் கொன்றது யார் என்று அனைவருக்கும் தெரியும். நான் நீதிக்காக போராடிக் கொண்டிருந்தபோது, வேறு யாரும் எனக்கு உதவ முன்வராத நிலையில், எனக்கு நீதி வழங்கிய முதலமைச்சருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்" என்று கூறினார். 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்