ஆந்திரா மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த நாகபூஷணா என்பவர் ஃபேஸ்புக்கில் பெண் போல பேசி பலரிடமும் பல லட்சம் ஏமாற்றியுள்ளார்.
ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டம் காஜிபேட்டையைச் சேர்ந்தவர் வரப்பிரசாத் என்பவர் அதே ஊரில் டீக்கடை வைத்திருந்தார். இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து காஜிப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அதைத்தொடர்ந்து வரப்பிரசாத்தின் வீட்டில்லிருந்து ஒரு கடிதத்தை காவல் துறையினர் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் அவர் ஃபேஸ்புக் மூலம் அனு என்ற பெண்ணிடம் காதல் வசப்பட்டு ரூ:4 லட்சத்தை பறிகொடுத்தது தெரியவந்தது. அதனால் விரக்தியில் தற்கொலை செய்துகொண்டதும் தெரியவந்தது.
பின்னர், வரப்பிரசாத்தின் வங்கி கணக்கை வைத்து போலீசார் விசாரித்ததில், விஜயவாடாவைச் சேர்ந்த நாகபூஷணா என்பவர் பெண் போல பேசி ஏமாற்றியது தெரியவந்தது.
மேலும் அந்த நாகபூஷணா, ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 57 பேரிடம் ஃபேஸ்புக்கில் இதுபோன்று பெண்ணாக நடித்து பல லட்சம் மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. காவல் துறையினர் நாகபூஷணாவை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.