மத்திய பிரதேச மாநிலத்தில் நேற்று திடீரென ஏற்பட்ட அரசியல் குழப்பத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காங்கிரஸ் கட்சியின் பிரமுகராக இருந்த ஜோதிராதித்ய சிந்தியா தலைமையிலான 19 எம்எல்ஏக்கள் திடீரென ராஜினாமா செய்ததையடுத்து அவருடைய ஆதரவாளர்கள் மேலும் 3 பேர் ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் நேற்று ஜோதிராதித்ய சிந்தியா, பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்துள்ளதால் அவர் விரைவில் பாஜகவில் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது 22 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளதால் கமல்நாத் தலைமையிலான ஆட்சி ஆட்டம் கண்டுள்ளது. இந்த நிலையில் காங்கிரஸ் தனது ஆட்சியை கைப்பற்றிக் கொள்ள தீவிர முயற்சி செய்து வருவதாகவும் ஆட்சியை பிடிக்க பாஜக பெரும் முயற்சி செய்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரமும் நடந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது
இதனை அடுத்து காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் இருந்து கூண்டோடு ஜெய்ப்பூருக்கு மாற்றப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. அதேபோல் பாஜக எம்எல்ஏக்கள் அனைவரும் டெல்லிக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும் தற்போது அதிருப்தி எம்எல்ஏக்களும் ஜோதிராதித்ய சிந்தியாவின் ஆதரவாளருமான 22 எம்எல்ஏக்கள் பெங்களூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்கி உள்ளனர். அவர்களை சந்தித்து சமாதானப்படுத்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள் பெங்களூர் விரைந்து உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன
மொத்தத்தில் மத்திய பிரதேச மாநில எம்எல்ஏக்கள் அனைவரும் ஜெய்பூர் டெல்லி மற்றும் பெங்களூரில் இருப்பதால் மத்தியபிரதேச மாநில அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது