கிரிப்டோகரன்சியை பரிமாற்றம் செய்யும் முன்னணி நிறுவனமான CoinDCX, ஹேக் செய்யப்பட்டுள்ளதாகவும், இதனால் நிறுவனத்திற்கு ரூ.379 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும், வாடிக்கையாளர்களின் முதலீடுகளுக்கு எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என்று நிறுவனம் உறுதியளித்துள்ளது.
இந்த நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி சுமித் குப்தா வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நிறுவனத்தின் கருவூல கணக்கில் மட்டுமே இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது என்றும், முதலீட்டாளர்களின் பணம் பாதுகாப்பாக இருக்கிறது என்றும் தெரிவித்துள்ளார். நிறுவனத்தின் உள் செயல்பாட்டுக் கணக்கில் ஏற்பட்ட ஒரு தொழில்நுட்ப பிரச்சினை காரணமாகவே இந்த ஹேக்கிங் நடந்ததாகவும், வாடிக்கையாளர்களின் கணக்குகளுக்கு எந்தவிதமான அசம்பாவிதமும் இல்லை என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
மேலும் "வாடிக்கையாளர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை. வாடிக்கையாளர்களின் நிதியில் எந்தவித பாதிப்பும் இல்லை. 'கோல்ட் வாலட்' எனப்படும் எங்கள் பாதுகாப்பான தொழில்நுட்ப உள்கட்டமைப்பால் முதலீட்டாளர்களின் முதலீடுகள் பாதுகாப்பாக உள்ளன. அனைத்து விதமான வர்த்தக செயல்பாடுகள் மற்றும் இந்தியப் பணப் பரிமாற்றம் முழுவதும் இயங்கும் நிலையிலேயே உள்ளது" என்று சுமித் குப்தா தெரிவித்துள்ளார்.
வாடிக்கையாளர்கள் எந்த நேரத்திலும் தங்களுடைய பணத்தை எடுக்கலாம் என்றும், பணத்தை திரும்ப பெறும் அனைத்து கோரிக்கைகளையும் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் CoinDCX அறிவித்துள்ளது. இந்த ஹேக்கிங் சம்பவம் கிரிப்டோகரன்சி முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியிருந்தாலும், நிறுவனத்தின் உடனடி மற்றும் தெளிவான பதில்கள் பதட்டத்தை குறைத்துள்ளன.