உனக்கு அறிவிருக்கா? கேமராவ பிடுங்கி எறியுறேன்: விருதுநகர் கூட்டத்தில் வைகோ கோபம்..!

Siva

வியாழன், 10 ஜூலை 2025 (08:13 IST)
விருதுநகரில் நடந்த ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வைகோ பேசிக் கொண்டிருந்தபோது, கூட்டத்தை படம்பிடித்த கேமராமேனை பார்த்து, "உனக்கு அறிவு இருக்கிறதா? உன்னுடைய கேமராவை பிடுங்கி எறிகிறேன்!" என்று அவர் கோபப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 
 
தி.மு.க. கூட்டணியில் உள்ள ம.தி.மு.க. தொடர்ந்து அந்த கூட்டணியில் நீடிக்கும் என்றும், எந்த காரணத்தை முன்னிட்டும் இந்த கூட்டணியில் இருந்து வெளியேறாது என்றும் வைகோ உறுதியாக கூறி வருகிறார். ஆனால், அதே நேரத்தில், ராஜ்யசபா எம்.பி. பதவி தராதது, மதிமுகவுக்கு குறைந்த இடங்கள்தான் ஒதுக்கப்படும் என்று கூறப்படுவது ம.தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்த நிலையில், விருதுநகரில் நேற்று நடந்த ம.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் வைகோ ஆவேசமாக பேசிக் கொண்டிருந்தார். அப்போது கூட்டத்திலிருந்து சிலர் எழுந்து கலைந்து சென்றனர். அதுவரை வைகோவை மட்டுமே வீடியோ எடுத்துக் கொண்டிருந்த கேமராமேன், கலையும் கூட்டத்தை நோக்கி கேமராவைத் திருப்பினார். 
 
இதைப் பார்த்து ஆவேசமடைந்த வைகோ, "உனக்கு அறிவு இருக்கா? கேமராவை பிடுங்கி எறிகிறேன்!" என்று கூறியது அங்கிருந்தவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. "உயிரைக் கொடுத்து நான் இங்கே பேசிக் கொண்டிருக்கிறேன். அதை கவர் செய்யாமல், கலைந்து செல்லும் கூட்டத்தை ஏன் படமெடுக்கிறாய்? என்று அவர் கேள்வி எழுப்பியது பரபரப்பை ஏற்படுத்தியது. இதன் பின்னர், காவல்துறையினர் அந்த கேமராமேனை வெளியேற்றிய பிறகு வைகோ தொடர்ந்து பேசினார்.
 
Edited by Siva

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்