டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், 'தி கெஜ்ரிவால் மாடல்' (The Kejriwal Model) என்ற புத்தகத்தின் பஞ்சாபி பதிப்பு வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டபோது, தனக்கு நோபல் பரிசு பெறும் தகுதி உள்ளது என்று கூறியதை அடுத்து, பா.ஜ.க. அவரை கிண்டல் செய்துள்ளது.
இந்த நிகழ்வில் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், தனது அரசாங்கத்தின் பணிகளை தடுக்க மீண்டும் மீண்டும் முயற்சி நடந்தபோதிலும், சிறப்பாக செயல்பட்டதாக தெரிவித்தார். "எங்கள் ஆட்சிக்கு ஏகப்பட்ட தடைகள் இருந்தபோதிலும், நாங்கள் சிறப்பாக நிர்வாகம் செய்ததற்காக நோபல் பரிசு கிடைக்க வேண்டும்," என்றும் அவர் கூறினார்.
அவரது இந்த கருத்தை பா.ஜ.க. கிண்டல் செய்துள்ளது. பா.ஜ.க.வின் வீரேந்திர சச்தேவா என்பவர் இது குறித்து கூறுகையில், "கெஜ்ரிவால் தன்னைத்தானே புகழ்ந்து கொள்வதாகவும், அவருக்கு நோபல் பரிசு கிடைக்கும் என்று கூறுவது நகைப்புக்கிடமானது" என்றும் தெரிவித்தார். மேலும், "திறமையின்மை, அராஜகம், ஊழல் ஆகிய பிரிவுகளில் ஒருவேளை நோபல் பரிசு கொடுப்பதாக இருந்தால், அவர் கண்டிப்பாக ஏதாவது ஒன்றை பெறுவார்" என்றும் கிண்டலாக குறிப்பிட்டார்.