ஒவ்வொரு இந்தியருக்கும் அத்தியாவசியமானதாக கருதப்படும் ஆதார் அட்டை மேற்குவங்க மாநிலத்தில் உள்ள சிலருக்கு முடக்கப்பட்டுள்ளதை அடுத்து ஆதார் அட்டைக்கு பதிலாக மாற்று அட்டை வழங்குவேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க மாநிலத்தில் எஸ்சி, எஸ்டி மற்றும் சிறுபான்மையினரின் வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் ஆதார் அட்டைகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும் இது குறித்து மாநில அரசுக்கு எந்தவித தகவலையும் மத்திய அரசு தெரிவிக்கவில்லை என்றும் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டி உள்ளார்.
இது குறித்து ஏற்கனவே அவர் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதி உள்ள நிலையில் உடனடியாக முடக்கப்பட்ட ஆதார் அட்டைகளை மீண்டும் இயங்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அரசின் நலத்திட்டங்கள் அப்போதுதான் மக்களுக்கு சென்று சேரும் என்றும் மக்களுக்கு நலத்திட்டங்கள் சென்று சேர்வதை தடுப்பதற்காகவே ஆதார் அட்டைகள் முடக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து மத்திய அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதார் அட்டைக்கு பதிலாக மாநில அரசின் சார்பில் புதிய அட்டை வழங்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.