மகாராஷ்டிராவில் சப் இன்ஸ்பெக்டரை கொன்ற கொலையாளியின் இருப்பிடத்தை கண்டுபிடித்தும் அவனை பிடிக்க முடியாத சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தின் கல்யான் நகரில் பெரிய ரௌடியாக இருந்தவன் இக்பால் அலிஸ். அங்குள்ள காவல் நிலையத்தில் சப் இன்ஸ்பெக்டராக பணிபுரிந்த மகேந்திரசிங் படேலுடன் ஏற்பட்ட விரோதத்தில் அவரை குத்தி கொன்றுவிட்டு தப்பியோடினான் இக்பால்.
அதற்கு பிறகு இக்பாலை பிடிக்க போலீஸார் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் அவனை கண்டுபிடிக்க முடியவில்லை. பல ஆண்டுகள் ஆகியும் இக்பால் சிக்காததால் போலீஸார் அந்த பைலை கிடப்பில் போட்டுவிட்டனர். இந்த சம்பவம் நடந்தது 1992ம் ஆண்டு! கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் கழித்து இந்த பைல் மீண்டும் தூசி தட்டப்பட்டது. போலீஸார் அனைவரும் மீண்டும் திவிரமாக இக்பாலை தேடும் முயற்சியில் ஈடுபட்டனர்.
பல இடங்களில் விசாரித்ததில் இக்பால் ஜசோனா என்னும் கிராமத்தில் பல ஆண்டுகளாக தலைமறைவாக வாழ்ந்து வந்தது தெரிய வந்தது. உடனடியாக அந்த கிராமத்திற்குள் ரகசியமாக நுழைந்து இக்பால் வீட்டை முற்றுகையிட்ட போலீஸாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. இக்பால் தலைமறைவாக நல்லபடியாக வாழ்ந்து கடந்த 2012ல் இறந்துவிட்ட செய்திதான் அவர்களுக்கு கிடைத்தது. குற்றவாளியே இறந்துவிட்டதால் அந்த வழக்கை போலீஸார் முடித்து வைத்தனர்.