78 வயதில் எஸ் எஸ் எல் சி பாஸ் ஆன மூதாட்டி!!

Arun Prasath

வியாழன், 17 அக்டோபர் 2019 (12:36 IST)
கேரளாவில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதி 78 வயது மூதாட்டி பாஸ் செய்து உள்ளார்.

கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டம், பினராயி பகுதியை சேர்ந்தவர் என்.பங்கஜாக்சி. இவருக்கு வயது 78. இவர் முதியோர் கல்வி திட்டத்தில் சேர்ந்து படித்து வந்தார்.

இந்நிலையில் தொடக்க மற்றும் இடைநிலை தேர்வுகளில் வெற்றி பெற்ற பங்கஜாக்சி உயர்நிலை தேர்வான எஸ்.எஸ்.எல்.சி, படித்து வந்தார். முதலாவதாக எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு எழுதியபோது, அவர் தேர்ச்சி பெறவில்லை. அதை தொடர்ந்து மூன்று முறை முயற்சி செய்தும் அவரால் தேர்ச்சி பெற முடியவில்லை.

3 முறை தோல்வியே மிஞ்சியதால், தொடர்ந்து தேர்வு எழுத தயக்கம் காட்டினார். அப்போது அவரது மகனும் ஆசிரியருமான சாஜீவன் அவருக்கு ஊக்கமளித்தார். அதன் பின்  4 ஆவது முறையாக பங்கஜாக்சி எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை எழுதினார். ஆனால் இந்த முறை அவர் தவறவிடவில்லை. அவர் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் தேர்ச்சி பெற்றார்.

78 வயதிலும் கடுமையாக படித்து எஸ்.எஸ்.எல்.சியில் பங்கஜாக்சி தேர்ச்சி பெற்ற செய்தி அப்பகுதியில் அவரை வியப்போடு பார்க்கவைத்துள்ளது. இது மட்டுமல்லாமல், தனது77 ஆவது வயதில் பங்கஜாக்சி, நீச்சல் கற்று அதற்கான சான்றிதழையும் பெற்றுள்ளார். மேலும் ஃபேஷன் டிசைனிங் பட்டபடிப்பும் முடித்துள்ளார். இவர் சிறந்த சமூக சேவகரும் ஆவார். அதற்கான விருதுகளும் பெற்றுள்ளார். 1973 ஆம் ஆண்டிலிருந்து பங்கஜாக்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்