வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளது: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு..!

Mahendran

சனி, 18 அக்டோபர் 2025 (14:26 IST)
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் வடகிழக்குப் பருவமழை தீவிரம் அடைந்துள்ளதாக தனியார் வானிலை ஆய்வு மைய நிபுணர்கள் பிரதீப் ஜான் மற்றும் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளனர். அடுத்தடுத்து உருவாகும் காற்றழுத்த சுழற்சிகளால் மழைப்பொழிவு அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
 
தென்மேற்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவுப் பகுதிகளில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த மண்டலமாக வலுப்பெறும்.
 
அக்டோபர் 24-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக்கடலில் மற்றொரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது.
 
இந்த 2 காற்றழுத்த அமைப்புகளால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. குன்னூர், மாஞ்சோலை, கன்னியாகுமரி உள்ளிட்ட தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இரவு நேரங்களில் கனமழை அதிகரிக்கும். கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் நல்ல மழை எதிர்பார்க்கப்படுகிறது.
 
அக்டோபர் 23 முதல் நவம்பர் 7 வரை பருவமழை மேலும் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னெச்சரிக்கையாக, தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் குமரிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்