ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வு பகுதிகள்.. கனமழை எச்சரிக்கை..!

Mahendran

சனி, 18 அக்டோபர் 2025 (12:39 IST)
தென் கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவுப் பகுதிகளில் ஒரே சமயத்தில் இரண்டு காற்றழுத்த தாழ்வுப் பகுதிகள் உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாகத் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
 
அக்டோபர் 16-ஆம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து, தென் மாவட்டங்கள், மேற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மழைப்பொழிவு தொடர்கிறது.
 
இந்த நிலையில் தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும் 
தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக, இன்று அதே பகுதிகளில், கேரள மற்றும் கர்நாடக கடலோப் பகுதிகளை ஒட்டி ஒரு காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது.
 
இந்த தாழ்வுப் பகுதி மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, அடுத்த 48 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
 
அதேபோல் அரபிக்கடலில் ஒரு தாழ்வுப்பகுதி உருவாகியுள்ள நிலையில்,   தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
 
 
Edited by Mahendran

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்