ஒரு கிலோ அமித்ஷா குடுங்க? உ.பியில் பிரபலமாகும் அமித்ஷா மாம்பழம்

Webdunia
செவ்வாய், 18 ஜூன் 2019 (18:43 IST)
உத்திர பிரதேசத்தில் அமித்ஷா பெயரில் அறிமுகமாகியுள்ள புதிய ரக மாம்பழம் பரவலான வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவின் “மாம்பழ மனிதர்” என அழைக்கப்படுபவர் ஹாஜி கலிமுல்லா கான். 79 வயதான தோட்டக்கலை நிபுணரான இவர் மாம்பழங்களின் மரபணுக்களை இணைத்து புதிய வகை மாம்பழங்களை உருவாக்குவதில் வல்லவர். பத்மஸ்ரீ விருது பெற்றவரான கலிமுல்லா கான், பாஜக தேசிய தலைவரும், மத்திய அமைச்சருமான “அமித்ஷா” பெயரில் புதிய வகை மாம்பழம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளார்.

இதுகுறித்து கலிமுல்லா கான் “அமித்ஷாவின் வாழ்க்கையும், அரசியல் செயல்பாடுகளும் என்னை வெகுவாக கவர்ந்தன. அவரது திறமையான செயல்பாடு, நாட்டின் மீது கொண்ட பற்றினை கௌரவிக்கும் விதமாக இந்த “அமித்ஷா மாம்பழத்தை” அறிமுகப்படுத்தியுள்ளேன். ஹஸ்னே-ஹரா மற்றும் தூஸ்சேரி ஆகிய இரண்டு மாம்பழ வகைகளை இணைத்து உருவாக்கியிருக்கும் இந்த புதிய வகை மாம்பழம் அமித்ஷாவின் உள்ளம் போலவே மிகவும் இனிப்பாக இருக்கும்” என கூறியிருக்கிறார்.

இதுபோலவே இதற்கு முன்னர் அப்துல்கலாம், சச்சின், வாஜ்பாய், நரேந்திர மோடி, பழம்பெரும் இந்தி நடிகை நர்கீஸ் ஆகியோர் பெயரில் இவர் மாம்பழங்களை அறிமுகம் செய்திருக்கிறார். சமீபத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பெயரில் வெளியிடப்பட்ட “யோகி” மாம்பழம் மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது.

தற்போது அமித்ஷா பழத்தையும் ஒரு வாய் பார்த்துவிடலாம் என “ஒரு கிலோ அமித்ஷா எவ்வளவு?” என்று தேடி திரிகிறார்கள் பாஜக தொண்டர்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்