புதுச்சேரியில் நிர்மலா சீதாராமன் போட்டியா..? முதல்வர் ரங்கசாமி உடன் மத்திய அமைச்சர் ஆலோசனை.!

Senthil Velan
திங்கள், 4 மார்ச் 2024 (18:17 IST)
புதுச்சேரி மக்களவை தொகுதியில் மத்திய அமைச்சர்  நிர்மலா சீதாராமன் போட்டியிட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 
 
புதுச்சேரியில் நடைபெறவுள்ள மக்களவை தேர்தலில் பாஜக போட்டியிடும் என மாநில முதலமைச்சரும், தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவருமான முதலமைச்சர் ரங்கசாமி ஏற்கனவே அறிவித்திருந்தார். மேலும் பாஜக சார்பில் யார் போட்டியிடுவார் என்பது குறித்து கட்சியின் மேலிடம் விரைவில் அறிவிக்கும் எனவும் தெரிவித்திருந்தார். 
 
இதனிடையே, புதுச்சேரியில் இன்று மாலை நடைபெறக்கூடிய பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி புதுச்சேரி வந்துள்ளார்.
 
இதேபோல் புதுச்சேரி மாநில தேர்தல் பொறுப்பாளரான நிர்மல் குமாரும் புதுச்சேரி வந்துள்ளார். இருவரும் தனியார் விடுதியில் தங்கியுள்ள நிலையில், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, மத்திய அமைச்சர் மற்றும் புதுச்சேரி பாஜக மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் ஆகிய இருவரையும் மரியாதை நிமித்தமாக சந்தித்தார். சுமார் அரை மணி நேரம் இந்த சந்திப்பு நடைபெற்றது. 
 
இந்த சந்திப்பின் போது புதுச்சேரியில் பாஜக சார்பில் யாரை போட்டியிட வைக்கலாம் என்பது குறித்து ஆலோசித்ததாக தெரிகிறது. புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியுடன் நடந்த ஆலோசனையின்போது 3 வேட்பாளர்களை பாஜக முன்மொழிந்தது.
 
இந்நிலையில், பாஜக முன்மொழிந்த 3 வேட்பாளர்களில், நிர்மலா சீதாராமன் பெயர் முதல் இடத்தில் இருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் புதுச்சேரி மக்களவை தொகுதியில்  நிர்மலா சீதாராமன் போட்டியிட அதிக வாய்ப்புள்ளது. 

ALSO READ: அங்காளபரமேஸ்வரி அம்மன் ஆலயம்.! மகா சிவராத்திரியை முன்னிட்டு கொடியேற்றம்..!!
 
ஏற்கனவே புதுச்சேரியில் பாஜக சார்பில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் போட்டியிடுவார் என பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வந்தனர். ஆனால் நமச்சிவாயம் மாநில அரசியலில் தொடர்வதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக தற்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை புதுச்சேரியில் பாஜக சார்பில் போட்டியிடுவதற்காக முன்வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்