பதஞ்சலிக்கு பச்சைக்கொடி... கழுவி ஊற்றிய இந்திய மருத்துவ சங்கம்!

Webdunia
செவ்வாய், 23 பிப்ரவரி 2021 (09:23 IST)
மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு இந்திய மருத்துவ சங்கம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. 

 
கோவிட் 19 எனப்படும் கொரோனா வைரஸ், உலக நாடுகளை ஸ்தம்பிக்க வைத்தது. இந்த நோய்த்தொற்றுக்கு 'கொரோனில்' என்ற ஆயுர்வேத மருந்தை பாபா ராம்தேவின் பதஞ்சலி நிறுவனம் கடந்த ஆண்டு ஜூன் மாதம் அறிமுகம் செய்தது. 
 
இந்த மருந்துக்கான அறிவியல் ஆதாரங்கள் மீது சந்தேகங்கள் எழுப்பப்பட்டதால் சர்ச்சை உருவானது. இதையடுத்து மத்திய ஆயுஷ் அமைச்சகம், கொரோனில் மருந்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடியது என்று மட்டும் கூறியது. 
 
இந்நிலையில் தொடர் ஆய்வுகளுக்குப் பிறகு அந்த மருந்து மேம்படுத்தப்பட்டு 'கொரோனில் கிட்' என்ற பெயரில் அறிவியல் ஆதாரங்களுடன் மீண்டும் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த விழாவில் பாபா ராம்தேவ், மத்திய அமைச்சர்கள் ஹர்ஷ் வர்தன், நிதின் கட்கரி ஆகியோரும் கலந்து கொண்டனர். 
 
இதனிடையே, மத்திய அமைச்சர் ஹர்ஷ வர்தனுக்கு இந்திய மருத்துவ சங்கம் சரமாரியாக கேள்வி எழுப்பியுள்ளது. அதில், நாட்டின் சுகாதார அமைச்சராக இருப்பவர், இதுபோன்ற தவறான திட்டத்தை வெளியிடுவது எந்த வகையில் சரியான ஒரு அணுகுமுறை? இதுபோன்ற பொய்யான, அறிவியலுக்குப் பொருத்தமற்ற ஒரு மருந்தை வெளியிடுவதை எப்படி நியாயப்படுத்த முடியும்?
 
சுகாதாரத்துறை அமைச்சரால் வெளியிடப்பட்டுள்ள அறிவியல்பூர்வமாக நிரூபிக்கப்படாத இந்த மருந்தை உலக சுகாதார அமைப்பு நிராகரித்துள்ளது. இது நாட்டு மக்களுக்குக் கிடைத்துள்ள மிகப் பெரிய ஒரு அவமானம். 
 
கொரோனில் மருந்து கொரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்தும் என்றால், பின் ரூ.35,000 கோடி செலவில் அரசு எதற்கு தடுப்பூசி செலுத்தும் பணிகளை மேற்கொள்கிறது? என இந்திய மருத்துவ சங்கம் கேட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்