என்னிடம் ஆலோசனை பெற்றவர்கள் எல்லாம் மாபெரும் தலைவர்களாக, மன்னர்களாக உருவாகினர், ஆனால் அவர்களால் மக்களுக்கு எந்த நன்மையும் இல்லை என பிரசாந்த் கிஷோர் கூட்டம் ஒன்றில் பேசியுள்ளார்.
பீகாரில் நடந்த கூட்டத்தில், ஜன் சுராஜ் கட்சித்தலைவர் பிரசாந்த் கிஷோர் பேசியதாவது: என் பெயர் பிரசாந்த் கிஷோர். நான் அரசியல் தலைவரல்ல. நான் சாதாரண குடும்பத்தின் மகன். என் தாத்தா பீகாரில் மாட்டு வண்டி ஓட்டிக் கொண்டிருந்த சாதாரண தொழிலாளி. என் தந்தை அரசு டாக்டராக இருந்தவர்.
கடந்த பத்தாண்டுகளில் நான் யாருக்கெல்லாம் ஆலோசனை கூறினேனோ, அவர்கள் எல்லாம் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தனர். ஆனால் 10 ஆண்டுகளாக அதை செய்த பிறகு, 3 ஆண்டுக்கு முன் அந்த வேலையில் இருந்து வெளியில் வந்து விட்டேன்.
என்னிடம் ஆலோசனை பெற்றவர்கள் எல்லாம் மன்னர்களாக ஆகும்படியான அறிவையும் சக்தியையும் கடவுள் எனக்கு அளித்திருக்கும்போது, நான் அத்தகைய ஆலோசனையை பீகார் மக்களுக்கும் வழங்க விரும்பினேன். நான் உங்கள் கையை பிடித்து உங்கள் வாழ்க்கையிலும் மாற்றத்தை ஏற்படுத்த விரும்புகிறேன்.இவ்வாறு பிரசாந்த் கிஷோர் பேசினார்.