பயங்கரவாதிகளுடன் பாகிஸ்தானுக்கு தொடர்பு இருப்பது உண்மைதான் என முன்னாள் அதிபர் பெனாசீர் புட்டோ மகன் பிலால் புட்டோ பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
பாகிஸ்தான், பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்து எல்லை தாண்டி பயங்கரவாதத்தை வளர்த்து வருவதாக இந்தியா கடந்த பல ஆண்டுகளாக குற்றச்சாட்டு கூறி வருகிறது.
இந்த நிலையில் முன்னாள் வெளியுறவுத்துறை அமைச்சர் மற்றும் பெனாசீர் புட்டோ மகனான பிலால் புட்டோ “பாகிஸ்தான் கடந்த காலத்தில் பல பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்தது உண்மைதான். இதில் ரகசியம் எதுவும் கிடையாது. அதனால்தான் பாகிஸ்தான் கடுமையாக பாதிக்கப்பட்டது” என தெரிவித்துள்ளார்.
“அப்படி பாதிக்கப்பட்டதால் தற்போது பாகிஸ்தான் பாடம் கற்றுக் கொண்டது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண சீர்திருத்தம் எங்கள் ஆட்சியில் செய்தோம். பயங்கரவாதம் எங்கள் நாட்டின் துரதிஷ்டமான வரலாறு” என்றும் அவர் தெரிவித்தார்.
ஆனால் அதே நேரத்தில், “பாகிஸ்தான் அமைதியான நாடு, இஸ்லாம் அமைதியான மதம். நாங்கள் போரை விரும்பவில்லை” என்றும் அவர் கூறியுள்ளார்.