ஜம்மு - காஷ்மீரில் பெய்துவரும் கனமழை, மேகவெடிப்பு மற்றும் நிலச்சரிவு காரணமாக டோடா மாவட்டத்தில் 4 பேர் உயிரிழந்தனர். மேலும், பல இடங்களில் வீடுகள் இடிந்து சேதமடைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
கனமழை, நிலச்சரிவு மற்றும் பாறைகள் உருண்டு விழுந்ததால், டோடா மற்றும் கிஷ்த்வார் நகரங்களை இணைக்கும் என்ஹெச்-244 தேசிய நெடுஞ்சாலையின் ஒரு பகுதி துண்டிக்கப்பட்டு, போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வைஷ்ணோ தேவி கோயில் செல்லும் வழியில் ஏற்பட்ட நிலச்சரிவில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
தாவி மற்றும் ராவி ஆகிய முக்கிய ஆறுகள் அபாய அளவை தாண்டி பாய்வதால் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மேலும், அனைத்து மாவட்டங்களிலும் உதவி எண்கள் அமைக்கப்பட்டு, அதிகாரிகள் முழு எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.