கேரள மாநிலம் வயநாடு பகுதியில் பெய்த கனமழை காரணமாக கடந்த 30-ம் தேதி அதிகாலை கடும் நிலச்சரிவு ஏற்பட்டது. இதன்காரணமாக, முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்து ஏராளமானோர் பலியாகினர்.
பாதிக்கப்பட்ட இடங்களில் 5-வது நாளாக தொடர்ந்து மீட்பு பணி நடைபெற்று வருகிறது. வயநாடு நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 340-ஐ கடந்துள்ள நிலையில், படுங்காயங்களுடன் மீட்கப்பட்டவர்கள், பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மேலும் 281 பேரை காணவில்லை. அவர்களை தீவிரமாக தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அவர்களில் பலர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. எனவே, நிலச்சரிவு உயிரிழப்பு 500-ஐ தாண்டக்கூடும் என்றுகேரள அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்நிலையில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதிகளில் ஆங்காங்கே கிடந்த தங்க நகைகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. அவற்றை கணக்கெடுக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மீட்கப்பட்ட நகைகள், விசாரணைக்கு பிறகு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.