தமிழ்நாட்டில் மழைக்காலம் தொடங்கிவிட்டதை அடுத்து, தமிழகம் முழுவதும் பரவலாக மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இந்த நிலையில், இந்திய வானிலை ஆய்வு மையம் தமிழ்நாட்டிற்கு மிக கனமழை பெய்யும் என்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது.
குறிப்பாக, தென் மாவட்டங்களில் உள்ள தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று மிக கனமழை பெய்ததால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
இதன் காரணமாக, தென்காசி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர் அறிவித்துள்ளார். அதேபோல், நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கும் இன்று பள்ளிகள் விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சி தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இதுவரை மூன்று மாவட்டங்களில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வேறு மாவட்டங்களில் இருந்து விடுமுறை குறித்த அறிவிப்பு வெளியாகிறதா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். இருப்பினும், சென்னையில் இன்று காலை வெயில் அடிப்பதால் விடுமுறைக்கான வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.