சட்ட விரோதமாக குடியேறியவர்களை திருப்பி அனுப்பப்படுவது என்பது வழக்கமான நடைமுறைதான் என்றும், விலங்கு மாட்டி அனுப்புவது அமெரிக்க வழக்கம் என்றும் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் விளக்கம் அளித்துள்ளது. இந்த விளக்கம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கி இருந்த இந்தியர்கள் நாடு கடத்தப்பட்ட நிலையில், அவர்கள் கைகால்களில் விலங்கு அணியப்பட்டதற்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தனர். காங்கிரஸ் உள்ளிட்ட பல கட்சிகள் இதை கடுமையாக விமர்சித்தன.
இந்த நிலையில், இன்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விளக்கம் அளித்தார். ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் இன்னொரு நாட்டில் சட்டவிரோதமாக வசிப்பது கண்டறியப்பட்டால், அவர்களை திருப்பி அனுப்புவது ஒவ்வொரு நாட்டின் கடமையாகும். சட்டவிரோத குடியேறிகள் நாடு கடத்தப்படுவது புதிதல்ல. அதேபோல், அமெரிக்காவும் தனது சட்டப்படி இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
அமெரிக்காவிலிருந்து திருப்பி அனுப்பப்படும் குடியேறிகளுக்கு விலங்கு அணியப்படும் நடைமுறை 2012 ஆம் ஆண்டு முதல் அங்கு நடைமுறையில் உள்ளது. பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு மட்டும் இந்த நடைமுறை இல்லை. இந்தியர்களை தவறாக நடத்தக்கூடாது என்று அமெரிக்காவிடம் ஏற்கனவே கூறியுள்ளோம்.
மேலும், இந்தியர்களை சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு அனுப்பிய ஏஜென்ட்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஜெய்சங்கர் கூறியுள்ளார். ஆனால், அவரது இந்த பதிலை எதிர்க்கட்சி எம்பிக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. இதனால், நாடாளுமன்றத்தில் பெரும் அமளி ஏற்பட்டது.